மத்திய அமைச்சரவையில் இடம்பெறுகிறதா தி.மு.க.? : வடமாநில ஊடக செய்திகளால் பரபரப்பு

முக்கிய மசோதாக்களை நிறைவேற்றும்போது, தி.மு.க. எம்.பி.க்களின் ஆதரவும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு தேவையாக உள்ளது.
மத்திய அமைச்சரவையில் இடம்பெறுகிறதா தி.மு.க.? : வடமாநில ஊடக செய்திகளால் பரபரப்பு
Published on

சென்னை,

மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அமைச்சரவையில் தி.மு.க.வும் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக வடமாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.

மத்திய அமைச்சரவை

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 29 மந்திரிகளும், 39 இணை மந்திரிகளும் உள்ளனர். சமீபத்தில் 'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக நடைபெற்ற தொடர் போராட்டத்தால், மத்திய கல்வி மந்திரியாக இருந்த தர்மேந்திர பிரதான், தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில், மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தர்மேந்திர பிரதானுக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

தி.மு.க.வும் இடம்பெறுகிறதா?

அதே நேரத்தில், 20-க்கும் மேற்பட்ட மத்திய மந்திரிகளின் இலாகாக்கள் (துறைகள்) மாற்றியமைக்கப்பட இருப்பதாக தெரிகிறது. இதில், பரபரப்பு என்னவென்றால், மாற்றியமைக்கப்படும் மத்திய அமைச்சரவையில் தி.மு.க.வும் இடம்பெறப் போகிறது என்பதுதான்.

வடமாநில ஊடகங்கள், விரைவில் மாற்றியமைக்கப்பட உள்ள மத்திய அமைச்சரவையில் தி.மு.க.வும் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியிட்டு வருகின்றன. அதற்கு காரணமாக, தொகுதி மறுவரையறை மசோதாவை கடுமையாக எதிர்த்து வந்த தி.மு.க., தற்போது சில நிபந்தனைகளுடன் ஆதரவு அளிக்க முன்வந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறது.

'இந்தியா' கூட்டணியில் இல்லை

"பா.ஜ.க.வுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை" என்று தொடர்ந்து தி.மு.க. கூறிவருகிறது. இதுவரை, காங்கிரஸ் தலைமையிலான 'இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றிருந்த தி.மு.க., தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி நிலைப்பாடு மாற்றத்தால், தேசிய அளவிலான கூட்டணியை விட்டு வெளியே வந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்களின் பலத்தை பொறுத்தவரை மக்களவையில் 22 ஆகவும், மாநிலங்களவையில் 8 ஆகவும் உள்ளது. எனவே, முக்கிய மசோதாக்களை நிறைவேற்றும்போது, தி.மு.க. எம்.பி.க்களின் ஆதரவும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு தேவையாக உள்ளது.

கனிமொழி எம்.பி. பங்கேற்பு

அதன் அடிப்படையிலேயே, பா.ஜ.க.வும், தி.மு.க.வும் நெருக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. கடந்த 13-ந் தேதி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அளித்த தேநீர் விருந்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி கலந்துகொண்டது சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதை வைத்தே, மத்திய அமைச்சரவையில் தி.மு.க.வும் இடம்பெறப்போவதாக வடமாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருவதாகவும் தெரிகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com