சிறையில் இருந்து கைதிகள் தப்பிக்க முற்பட்டால் இனி துப்பாக்கி சூடு..?

கைதிகள் தப்பியோடிய சம்பவம் எதிரொலியாக சிறைக் காவலர்கள் 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
சிறையில் இருந்து கைதிகள் தப்பிக்க முற்பட்டால் இனி துப்பாக்கி சூடு..?
Published on: 

சென்னை,

தேனி மாவட்ட சிறையில் இருந்து ஒரே நேரத்தில் 17 விசாரணை கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பி ஓடியவர்களை 24 மணி நேரத்துக்குள் கைது செய்ய வேண்டும் என்ற முனைப்பில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

தப்பியோடிய 17 பேரில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 பேரை பிடிக்கும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கைதான நபர்களிடமும், சிறையில் உள்ள பிற கைதிகளிடமும் நடத்திய விசாரணையில், 3 நாட்களாக திட்டம் தீட்டி தப்பி ஓடியது தெரியவந்தது. இதன் எதிரொலியாக சிறைக் காவலர்கள் 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதற்கிடையே சிறைத்துறை டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் தேனி மாவட்ட சிறைக்கு நேரில் சென்றார். அங்குள்ள சிறை காவலர்களிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் கூறுகையில் 'தலைமறைவான கைதிகளையும் விரைவில் பிடிப்போம்' என்றார்.

இந்த நிலையில், புழல், தேனி சிறைகளில் இருந்து கைதிகள் தப்பியோடிய சம்பவத்தை அடுத்து சிறைத்துறை டிஜிபி பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். அதன்படி, சிறைகளின் கண்காணிப்பு கோபுரங்களில் இனி துப்பாக்கி ஏந்திய போலீசாரைப் பணியில் ஈடுபடுத்தவும், சிறையில் இருந்து தப்ப முயற்சி, காவலர்கள் மீது தாக்குதல் போன்ற அசம்பாவிதங்களின் போது துப்பாக்கி சூடு நடத்தவும், சிறைகளில் இருந்து கைதிகள் தப்பி ஓடும் பட்சத்தில் சூழலுக்கு ஏற்றவாறு சுட்டுப்பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வாக்கி டாக்கி, பைனாகுலர் போன்ற உபகரணங்களுடன் சிறைக் கண்காணிப்பு கோபுரங்களில் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், அவர்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்படவுள்ளது. சிறைகளின் பாதுகாப்பு குறித்த தணிக்கை முடிந்தவுடன் அதிகாரபூர்வ உத்தரவு வெளியாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com