ஜோதிடம் பலிக்காததால் ஜோதிடரை கொன்ற பெண்.. விசாரணையில் பகீர் தகவல்

ஜோதிடம் பலிக்காததால் கூலிக்கு ஆள் வைத்து ஜோதிடரை கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜோதிடம் பலிக்காததால் ஜோதிடரை கொன்ற பெண்.. விசாரணையில் பகீர் தகவல்
Published on

நாகர்கோவில்,

நாகர்கோவில் பெருவிளை அருகே உள்ள கோட்டவிளை பகுதியை சேர்ந்தவர் ஜான் ஸ்டீபன். நாட்டு வைத்தியரான இவர், ஜோதிடமும் பார்த்து வந்தார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகன் கோவையில் தங்கி படித்து வருகிறார். இதனால் வீட்டில் கணவன்-மனைவி மட்டும் வசித்து வந்தனர்.

இந்த சூழலில் கடந்த 8-ந் தேதி ஜான் ஸ்டீபன் வீட்டில் பிணமாக கிடந்தார். அவரது உடலில் ரத்த காயங்கள் இருந்தன. இதுபற்றிய தகவல் அறிந்த ஆசாரிபள்ளம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் ஜான் ஸ்டீபனின் மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பிரேத பரிசோதனையில் ஜான் ஸ்டீபன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கொலை தொடர்பாக இரணியல் அருகே உள்ள கட்டி மாங்கோடு பகுதியை சேர்ந்த கலையரசி (43), நெல்லை மாவட்டம் கருவேலங்குளத்தைச் சேர்ந்த நம்பிராஜன் (25) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கைது செய்யப்பட்ட கலையரசி கணவனை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவர் தன் கணவருடன் சேர்ந்து வாழ்வதற்காக ஜோதிடம் பார்ப்பதற்காக ஜான் ஸ்டீபனிடம் வந்து உள்ளார். அப்போது சில பரிகாரங்களை செய்தால் கணவருடன் சேர்ந்து வாழலாம் என்று ஜான் ஸ்டீபன் கூறியதுடன் பணமும் வாங்கி உள்ளார்.

பலமுறை ஜோதிடம் பார்த்த பிறகும் கணவருடன் சேர்ந்து வாழ முடியவில்லை. இது கலையரசிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் ஜாண் ஸ்டீபனிடம் இதுபற்றி கேட்டுள்ளார். ஜோதிடர் கூறியது எதுவும் பலிக்காததால் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டார். ஆனால் ஜான் ஸ்டீபன் பணத்தை கொடுக்கவில்லை. இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த விரோதத்தில் தான் ஜான் ஸ்டீபனை தீர்த்து கட்ட கலையரசி முடிவு செய்தார். கூலிப்படையை ஏவி கொலை செய்ய திட்டம் தீட்டிய அவர், நம்பி ராஜனை தொடர்பு கொண்டு பேசினார். அதற்காக அவருக்கு பணமும் கொடுத்து உள்ளார். ஜான் ஸ்டீபனை தீர்த்து கட்டுவதற்காக அவரது வீட்டிற்கு நம்பிராஜன் வந்துள்ளார். வீட்டில் தனியாக இருந்த ஜான் ஸ்டீபனை கொலை செய்து விட்டு தப்பி சென்றது விசாரணையில் தெரிய வந்து உள்ளது. கைது செய்யப்பட்டுள்ள கலையரசி மற்றும் நம்பி ராஜனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com