

திருநெல்வேலி மாவட்டம் அம்பை பெரியகுளம் தெருவைச் சேர்ந்தவர் முத்துப்பட்டன் (வயது 32). கட்டிடத் தொழிலாளியான இவருக்கு சுதா(26) என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். முத்துப்பட்டன் தனது மனைவி சுதாவின் நடத்தையில் அடிக்கடி சந்தேகப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக தம்பதியினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்று மதியம் வீட்டில் குழந்தைகள் இல்லாத நேரத்தில், கணவன்-மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரத்தின் உச்சக்கட்டத்திற்குச் சென்ற முத்துப்பட்டன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்துச் சுதாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் ஆத்திரம் அடங்காத அவர், சுதாவின் தலையைத் தனியாகத் துண்டித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த சுதா, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், அம்பை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சுதாவின் உடல் மற்றும் துண்டிக்கப்பட்ட தலையை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட முத்துப்பட்டனைப் போலீசார் உடனடியாகக் கைது செய்தனர். அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடந்து வருகிறது. குடும்பத் தகராறில் இளம்பெண் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அம்பை பகுதியில் மிகுந்த சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.