தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக மோடி மீது தேர்தல் கமிஷனிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு புகார்

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக மோடி மீது தேர்தல் கமிஷனிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி புகார் தெரிவித்துள்ளது.
Published on

புதுடெல்லி,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேர்தல் கமிஷனுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பிரதமர் மோடி கடந்த சனிக்கிழமை ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில், ராணுவத்தின் தாக்குதல் திட்டம் குறித்த விவரங்களை வெளிப்படுத்தி உள்ளார்.

மோசமான வானிலையையும், ராணுவ நிபுணர்களின் அறிவுரையையும் மீறி, பாலகோட் தாக்குதல் நடத்த விமானப்படைக்கு நான் அனுமதி கொடுத்தேன். ஏனென்றால், மேகங்கள், பாகிஸ்தான் ரேடாரின் பார்வையில் இருந்து இந்திய விமானங்களை மறைத்து விடும் என்று கருதினேன் என்று மோடி கூறியுள்ளார்.

வாக்காளர்களை ஈர்ப்பதற்காக, இத்தகைய உணர்வுபூர்வமான தகவல்களை வெளியிட்டுள்ளார். இதை தேர்தல் கமிஷன் பதிவு செய்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனது தொடர் விதிமீறல்களால், தேர்தல் கமிஷனை மோடி கேலி செய்து வருகிறார். எனவே, தேர்தல் கமிஷனின் கவுரவத்தையும், நம்பகத்தன்மையையும் பாதுகாக்க தாங்கள் நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

மோடி மற்றும் பா.ஜனதா தலைவர்களுக்கு எதிரான புகார்களை சமீபத்தில் தேர்தல் கமிஷன் நிராகரித்தது. இதனால், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டவன் என்று தன்னை மோடி நினைத்துக்கொள்கிறார் போலிருக்கிறது. தனக்கு தேர்தல் விதிமுறைகள் பொருந்தாது என்று கருதுவது போல் தெரிகிறது. அதனால்தான் அவர் தொடர்ந்து ராணுவத்தை பற்றி பேசி வருகிறார்.

உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் 12-ந் தேதி (நேற்று) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்திலும் ராணுவத்தை பற்றி பேசியுள்ளார். அவருக்கு தேர்தல் விதிமுறைகள் பொருந்தாது என்று தேர்தல் கமிஷன் கருதுவதாக பத்திரிகைகளில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

அவையெல்லாம் தவறு என்பதை நிரூபிக்கும் வகையில், மோடி மீது தேர்தல் கமிஷன் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com