சென்னை,
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் பல்வேறு மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 3,000-க்கும் அதிகமானோர் அக்கட்சிகளில் இருந்து விலகி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வில் சேர்ந்தனர். இந்த விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்றது.
விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழக வரலாற்றில் இடைத்தேர்தலில் ஆளும் கட்சிதான் வெற்றி பெறும் என்ற நிலை இருந்தது. அது எப்படி நடக்கிறது என்ற பிரச்சினைக்குள் நான் போகவிரும்பவில்லை. அதை, தி.மு.க. மாற்றிக்காட்டியது. அதேபோல், ஆளும் கட்சிதான் உள்ளாட்சித் தேர்தலில் ஜெயிப்பது வழக்கம். பல இடங்களில் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை முறையாக நடக்கவில்லை. இப்படியெல்லாம் செய்தும் அ.தி.மு.க.வை விட உள்ளாட்சித் தேர்தலில் அதிகம் வெற்றிபெற்றது தி.மு.க. தான்.
நான் விவசாயி, விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று மீண்டும் மீண்டும் எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். இதைப்பற்றி பேசினால் அவருக்கு கோபம் வருகிறது. சரி, அவர் விவசாயி என்றே வைத்துக்கொள்வோம். சேலத்தில் எட்டுவழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் போராடினார் கள், சிறைக்குச்சென்றார்கள், பலர் வழக்குகளில் சிக்கினார் கள்.
ஒரு விவசாயியாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்ன செய்திருக்க வேண்டும்?. எட்டுவழிச்சாலை திட்டத்தை தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். தடுத்து நிறுத்தினால் கமிஷன் வராது என்பதால் அதை செய்யவில்லை.
காவிரி டெல்டா பகுதிகளில் தி.மு.க. வலிமையாக விளங்குகிறது. அங்கே அ.தி.மு.க. ஜெயிக்க வேண்டும் என்பதற்காக, தேர்தலுக்காக, மக்களை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதுதான், பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம்.
குடியுரிமை திருத்த சட்டத்தால் முஸ்லிம்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் மட்டும் பிரச்சினை இல்லை. நாட்டில் உள்ள பலதரப்பட்ட மக்களுக்கும் பாதிப்பு. மாநிலங்களவையில் அ.தி.மு.க.வின் 10 உறுப்பினர்களும் பா.ம.க.வின் ஒரு உறுப்பினரும் எதிர்த்து வாக்களித்திருந்தால் குடியுரிமை திருத்தச் சட்டமே நிறைவேறி இருக்காது. இவர்கள் ஆதரித்து வாக்களித்ததால்தான் நாடு முழுவதும் போராட்டங்கள்.
தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டுக்கும் பச்சைத்துரோகம் செய்த கட்சிகள் அ.தி.மு.க.வும் பா.ம.கவும் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. இதை மூடி மறைப்பதற்காகத்தான் நாங்கள் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருப்போம் என்று பொய் பிரசாரத்தை செய்துகொண்டிருக்கிறார்கள்.
சட்டமன்ற தேர்தலில் இந்த ஆட்சிக்கு மொத்தமாக முடிவு கட்டவேண்டும். முடிவு கட்டுவது மட்டுமல்லாது ஊழல் செய்பவர்களை, கொள்ளை அடிப்பவர்களைச் சிறையில் தள்ளவேண்டும். அதற்கான காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.