நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடும் அமளியுடன் தொடங்கியது - பரூக் அப்துல்லா காவல் விவகாரத்தால் கொந்தளிப்பு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடும் அமளியுடன் தொடங்கியது. பரூக் அப்துல்லா காவல் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பின.
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. மக்களவையில், புதிய உறுப்பினர்களாக தி.மு.க.வை சேர்ந்த கதிர் ஆனந்த் உள்பட 4 பேர் பதவி ஏற்றுக்கொண்டனர். கதிர் ஆனந்த் பதவி ஏற்பதைக் காண அவருடைய தந்தையும், தி.மு.க. பொருளாளருமான துரைமுருகன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் சபைக்கு வந்திருந்தனர்.

சமீபத்தில் மறைந்த முன்னாள் மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ராம் ஜெத்மலானி உள்பட 10 முன்னாள், இந்நாள் உறுப்பினர்களுக்கு சபையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர், கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. கேள்வி நேரம் தொடங்கிய சில நிமிடங்களில், காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த சுமார் 30 உறுப்பினர்கள் திடீரென சபையின் மையப்பகுதிக்கு சென்று அமளியில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சிகளை குறிவைத்து தாக்குவதையும், பொய் வழக்கு போடுவதையும் நிறுத்துமாறு அவர்கள் கோஷமிட்டனர். தேசிய மாநாட்டு கட்சியினர், தங்கள் கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான பரூக் அப்துல்லா, 100 நாட்களுக்கு மேலாக காவலில் வைக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினர்.

புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி உறுப்பினர் என்.கே.பிரேமசந்திரனும் துணை கேள்வி எழுப்ப அனுமதிக்கப்பட்டபோது, இப்பிரச்சினையை எழுப்பினார். பரூக் அப்துல்லா இந்த அவையில் இல்லை. அவை ஒழுங்காக இல்லை. அதனால் என்னால் கேள்வி கேட்க முடியவில்லை என்று பிரேமசந்திரன் கூறினார்.

சிவசேனா உறுப்பினர்கள், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி கோஷமிட்டனர். தி.மு.க. உறுப்பினர்களும் எழுந்து நின்று கோஷமிட்டனர்.

அப்போது, சபாநாயகர் ஓம் பிர்லா குறுக்கிட்டு, எல்லா பிரச்சினைகளையும் விவாதிக்க தயாராக இருக்கிறேன். கேள்வி நேரத்தை நடத்தவிடுங் கள். இருக்கைக்கு செல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார். அதை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்கவில்லை.

நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, எத்தகைய விவாதத்துக்கும் அரசு தயாராக இருப்பதாக கூறினார். ஆயினும், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி நீடித்தது. அந்த அமளிக்கிடையே 7 கேள்விகளும், அதுதொடர்பான துணைக்கேள்விகளும் எடுத்துக்கொள்ளப்பட்டன.

கேள்வி நேரம் முடிந்த பிறகு, பூஜ்ய நேரத்திலும், பரூக் அப்துல்லா காவல் பிரச்சினையை காங்கிரஸ் எழுப்பியது. மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பரூக் அப்துல்லாவை காவலில் வைத்தது சட்டவிரோதம், அவர் சபைக்கு வர அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். சோனியா காந்தி குடும்பத்துக்கும், மன்மோகன் சிங்குக்கும் கருப்புப்பூனைப்படை பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதை அவர் குறை கூறினார்.

தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசுகையில், பரூக் அப்துல்லாவுக்கு நடந்தது சட்டவிரோதமானது. இந்த சபைக்கு சபாநாயகரே பாதுகாவலர் என்பதால், அவர் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தேசிய மாநாட்டு கட்சி எம்.பி. ஹஸ்னன் மசூடியும் பரூக் அப்துல்லாவை சபைக்கு வர அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில், மறைந்த முன்னாள், இந்நாள் உறுப்பினர்கள் 10 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பொதுவாக, இரங்கல் தீர்மானம் மீது உறுப்பினர்கள் பேச அனுமதிக்கப்படுவது இல்லை.

ஆனால், இந்த மரபுக்கு மாறாக, உறுப்பினர்கள் பேச அனுமதிக்கப்பட்டனர். அப்போது, அருண் ஜெட்லி குறித்து பெரும்பாலான கட்சி உறுப்பினர்கள் புகழாரம் சூட்டினர். பின்னர், மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், பிற்பகல் 2 மணி வரை சபை தள்ளிவைக்கப்பட்டது.

இதற்கிடையே, காஷ்மீருக் கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து நாடாளுமன்ற வளாகத்தில் மக்கள் ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் மிர் பயாஸ், நசீர் அகமது லாவே ஆகியோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com