மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து பள்ளி மாணவன் உள்பட 2 பேர் பலி

கந்தம்பாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து பள்ளி மாணவன் உள்பட 2 பேர் பலியானார்கள்.
Published on

கந்தம்பாளையம்,

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வட்டம், கந்தம்பாளையம் அருகே உள்ள குப்பிரிக்காபாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் வருதராஜ். இவருடைய மகன் பொன்னுசாமி(வயது 36). ரிக் வண்டி டிரைவர். அதே ஊரை சேர்ந்த அம்மாவாசை என்பவரின் மகன் லோகேஷ்(11). இவன் பெருங்குறிச்சியில் உள்ள ஆர்.சி.நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பொன்னுசாமியும், லோகேசும் பெருங்குறிச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது அம்மையன்காடு என்ற இடத்தில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து இருவரும் கீழே விழுந்தனர்.

இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரையும் அக்கம், பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு லோகேசை மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனைக்கும், பொன்னுசாமியை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர்.

அங்கு 2 பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இது குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com