பெங்களூருவில் இருந்து வருபவர்களுக்கு அனுமதி கிடையாது: கிராம எல்லைகளை மூடி, அறிவிப்பு பலகை வைத்த மக்கள்

சாம்ராஜ்நகர் மாவட்டத்திற்குள் நுழைய பெங்களூருவில் இருந்து வருபவர்களுக்கு அனுமதி கிடையாது என்று கிராம எல்லைகளை மூடி, அறிவிப்பு பலகையை மக்கள் வைத்துள்ளனர்.
பெங்களூருவில் இருந்து வருபவர்களுக்கு அனுமதி கிடையாது: கிராம எல்லைகளை மூடி, அறிவிப்பு பலகை வைத்த மக்கள்
Published on

கொள்ளேகால்,

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. பெங்களூருவில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக, பெங்களூருவில் வசிப்பவர்கள், தங்களின் சொந்த ஊருக்கு திரும்பி வருகிறார்கள். அவ்வாறு பெங்களூருவில் இருந்து வருபவர்களால் தங்கள் பகுதிக்கும் கொரோனா பரவி விடுமோ என்று வெளிமாவட்ட மக்கள் அஞ்சுகிறார்கள். இதனால் பெங்களூருவில் இருந்து வருபவர்களை மக்கள் வேற்று கிரகவாசி போல பார்க்கிறார்கள். மேலும், தங்கள் பகுதிக்கு பெங்களூருவில் இருந்து வருபவர்களை அனுமதிக்க மறுக்கிறார்கள்.

இந்த நிலையில், சாம்ராஜ்நகர் மாவட்டத்திற்குள் நுழைய பெங்களூருவில் இருந்து வருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது, பெங்களூருவில் இருந்து வருபவர்கள் பரிசோதனை நடத்தி 14 நாட்கள் தனிமையில் வைக்கப்படுகிறார்கள். அதன்பிறகே அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல அனுமதிக்கப் படுகிறார்கள். இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

மேலும், பெங்களூருவில் வசிப்பவர்கள் தங்களின் பகுதிக்கு வர மாவட்டத்தில் பல்வேறு கிராமங்கள் தடை விதித்துள்ளன. அதாவது, சாம்ராஜ்நகர் தாலுகாவில் பண்டிகெரே, படமூடலு, நல்லூர், ஹனூர் தாலுகாவில் முள்ளூர், பஸ்திபுரா, குன்னபள்ளி, ஹம்பாபுரா, ஹரலே தாசனபுரா, லொக்கனஹள்ளி, தொட்டிந்துவாடி, எலந்தூர் தாலுகாவில் உப்பந்தமோகி, கிருஷ்ணாபுரா, சிவள்ளி, அவல்கந்தஹள்ளி ஆகிய கிராமங்களில் பெங்களூருவில் வசிப்பவர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் மந்திரியும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான புட்டரங்கஷெட்டியின் கிராமமான சுவாகரம் கிராமமும் ஒன்றாகும்.

இந்த கிராமங்களின் எல்லைப்பகுதியும் கம்பு மற்றும் முள்வேலிகளால் மூடப்பட்டுள்ளது. அங்கு பெங்களூருவில் இருந்து வருபவர்களுக்கு அனுமதி கிடையாது என்று அறிவிப்பு பலகையும் வைத்துள்ளனர். அத்துடன் எல்லைப்பகுதியில் காவலுக்கும் ஆட்கள் இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com