ஊருக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம் பசு மாட்டை தந்தத்தால் குத்தி கொன்றதால் கிராம மக்கள் பீதி

கொளத்தூர் அருகே ஊருக்குள் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம் செய்தது. ஒரு பசு மாட்டை யானை தந்தத்தால் குத்தி கொன்றது. மற்றொரு மாடு காயம் அடைந்தது. இதனால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
Published on

கொளத்தூர்,

சேலம் மாவட்டம், கொளத்தூரை அடுத்த செட்டிப்பட்டி வடக்கு ஊஞ்சகொரை கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 55). நேற்று முன்தினம் இரவு இவர், தனது வீட்டின் முன்புறத்தில் வயல்காட்டையொட்டி தனக்கு சொந்தமான பசு மாடு ஒன்றை கட்டி வைத்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் பசு மாட்டின் சத்தம் கேட்டு அவர் வீட்டின் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார். அப்போது அங்கு வந்த ஒற்றை காட்டு யானை, தனது தந்தத்தால் பசுவின் வயிற்றில் குத்தி கிழித்தது. இதில் அந்த மாடு சம்பவ இடத்திலேயே செத்தது.

இதனிடையே கோவிந்தராஜ், யானை நிற்பது குறித்து கூச்சல் போடவே, அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் யானையை அங்கிருந்து விரட்டினர். இது குறித்து தகவல் அறிந்ததும், மேட்டூர் வனத்துறையினர் அங்கு விரைந்து வந்து செத்து கிடந்த பசுவை மீட்டு சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை நடத்தினர்.

மற்றொரு மாடு

இதேபோன்று கொளத்தூர் அருகே மற்றொரு கிராமத்திற்குள்ளும் யானை புகுந்து மாடு ஒன்றை தாக்கிய சம்பவமும் நடந்துள்ளது. கொளத்தூரை அடுத்த கோவிந்தப்பாடி அரிசிபாளையம் பகுதியை சேர்ந்த ரங்கராஜ் என்பவருடைய பசு மாட்டையும், அங்கு வந்த யானை தாக்கி உள்ளது. இதில் அந்த பசு மாட்டிற்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்தும், மேட்டூர் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொளத்தூர் வனப்பகுதியையொட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் வறட்சி காரணமாக, அங்குள்ள நீரூற்றுகள் வற்றிய நிலையில், நீர் நிலைகளை தேடி யானை போன்ற வன விலங்குகள் வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களில் புகுந்து மாடுகளை தாக்கி அட்டகாசம் செய்து வருவதால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

கிராம மக்கள் பீதி

கடந்த காலங்களில் வனப் பகுதியில் வறட்சி காலங்களில் யானை போன்ற வனவிலங்குகள் நீர்நிலைகளை தேடியும், தீவனத்திற்காகவும் மட்டுமே கிராம பகுதிக்கு வரும். அவ்வாறு வரும் யானைகள் விளைநிலங்களை சேதப்படுத்துவதோடு நிறுத்தி கொள்ளும். இந்த முறை யானைகள் மாடுகளை தாக்கிய சம்பவம் விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக நேற்று இந்த இரு கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது ஒற்றை காட்டு யானை என்பதால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். உடனடியாக அந்த யானையை காட்டுக்குள் விரட்டிடவும், வன விலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க, உடனடியாக தற்காலிக செயற்கை நீரூற்றுகளை வனப்பகுதியில் அமைக்கவும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com