பாகிஸ்தானில் கனமழை: திடீர் வெள்ளப்பெருக்கால் பலி எண்ணிக்கை 344 ஆக உயர்வு

பாகிஸ்தானில் கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் பலி எண்ணிக்கை 344 ஆக உயர்ந்துள்ளது.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் அங்குள்ள பஜவுர், புனேர், ஸ்வாட், ஷாங்லா, டோர்கர் உள்ளிட்ட மாவட்டங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அப்போது முக்கிய நெடுஞ்சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் சென்றதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. எனவே அங்கு சென்றிருந்த சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த ஊர் செல்ல முடியாமல் சிக்கிக்கொண்டனர்.
அதேபோல் பஞ்ச்கோரா, சுத்னோதி ஆகிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. எனவே கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. மேலும் வருகிற 21-ந் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதனால் அவர்கள் மீட்கப்பட்டு தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையே ஷாங்க்லா, மன்சேரா நகரங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் 75-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. இதனை தொடர்ந்து பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.
இந்த வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருந்தனர். மேலும் பலர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதால் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமானோர் சடலமாக கண்டெடுக்கப்பட்டதால் பலி எண்ணிக்கை 344 ஆக உயர்ந்துள்ளது.
இதனையடுத்து வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணியை தீவிரப்படுத்துமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக அவசர கால நிவாரண நிதியை மாகாண முதல்-மந்திரி அலி அமீன் கந்தாபூர் உடனடியாக விடுவித்துள்ளார். எனவே போர்க்கால அடிப்படையில் தீவிர மீட்பு பணி நடைபெற்று வருகிறது.






