

லண்டன்,
ஐரேப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவது குறித்து வரலாற்று சிறப்புமிக்க வாக்கெடுப்பு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றது. ஐரேப்பிய யூனியனிலிருந்து விலகுவது தெடர்பான உடன்பாடு நேற்று எட்டப்பட்டது.
எனினும் இந்த ஒப்பந்தத்தை பிரிட்டனில் உள்ள முக்கிய எதிர்கட்சிகள் எதிர்த்தன. இதனால் ஐரேப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்குமா என்பதை உலகமே எதிர்நேக்கி இருந்தது.
இந்நிலையில் இன்று பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது, பிரதமர் போரிஸ் ஜான்சனின் பிரெக்ஸிட் ஒப்பந்தம் குறித்த முடிவை தாமதப்படுத்த வேண்டும் என்று பிரிட்டன் எம்.பி.க்கள் வாக்களித்தனர். அக்டோபர் 31 காலக்கெடுவுக்கு முன்னர் ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்களைப் படித்து பார்க்க கால அவகாசம் தேவை என்று வாதிட்டனர்.
2020ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை பிரெக்ஸிட் நடவடிக்கையை நீட்டிக்க வேண்டும் என்னும் புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு இதன்மீது எம்.பி.க்கள் வாக்களித்தனர். 322 எம்.பி.க்கள் சட்டத்திருத்தத்துக்கு ஆதரவாகவும், 306 எம்.பி.க்கள் எதிர்த்தும் வாக்களித்தனர். 16 வாக்குகள் வித்தியாசத்தில் அந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சட்டமாக தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், அக்டோபர் 31 அன்று புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தத்துடன் நாங்கள் புறப்படுவதே இங்கிலாந்து மற்றும் முழு ஐரோப்பாவிற்கும் சிறந்த விஷயம். நான் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தாமதமாக பேச்சுவார்த்தை நடத்த மாட்டேன், அவ்வாறு செய்ய சட்டம் என்னை கட்டாயப்படுத்தவில்லை என்று தெரிவித்தார்.