

இஸ்லாமாபாத்,
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் 40 துணை வீரர்களை பலிகொண்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு, பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லையில் உள்ள பாலகோட் பகுதியில் இருக்கும் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் பயங்கரவாத முகாம்களை தாக்கி இந்திய விமானப்படை அழித்தது.
இதைத் தொடர்ந்து ஐ.நா.வில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக்கோரி அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தன. கடந்த 4 முறை இந்தியா கொண்டுவந்த தீர்மானம் அனைத்தையும் சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முட்டுக்கட்டை போட்டது.
ஆனால், அண்மையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக்கோரி தீர்மானம் நிறைவேறியது. அதனை தொடர்ந்து மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார்.
இதன் மூலம் மசூத் அசார் எந்த ஒருநாட்டுக்கும் தப்பிச் செல்ல முடியாத வகையில் தடை கொண்டுவரப்பட்டது. அத்துடன் சர்வதேச நாடுகளில் இருக்கும் மசூத் அசாரின் சொத்துகள் மற்றும் அவரது வங்கிக்கணக்குகள் அனைத்தும் முடக்க உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் பாகிஸ்தானில் இருக்கும் மசூத் அசாரின் சொத்துகளை முடக்கவும், அவர் வெளிநாடு செல்ல தடைவிதித்தும் அந்நாட்டு அரசு நேற்று உத்தரவிட்டது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
அரசின் உத்தரவின் அடிப்படையில் மசூத் அசாருக்கு எதிராக கடந்த 2017-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்மானம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. அவரின் சொத்துகள் அனைத்தும் முடக்கப்படுவதோடு, அவர் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்படுகிறது. அத்துடன் மசூத் அசார் தனது ஆயுதங்களை விற்பனை செய்யவும், தனிநபர் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து மசூத் அசார் ஆயுதங்கள், தளவாடங்களை வாங்கவும் தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.