ஈராக்கில் அமெரிக்க படை தளம் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல்

ஈராக்கில் உள்ள அமெரிக்க படை தளத்தின் மீது நேற்று மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.
ஈராக்கில் அமெரிக்க படை தளம் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல்
Published on

பாக்தாத்,

ஈரானின் அண்டை நாடான ஈராக்கில் அமெரிக்க படைகள் உள்ளன. அங்குள்ள பிஸ்மாயக், அல்-ஆசாத் விமானப்படை தளம், எர்பில் உள்ளிட்ட சில இடங்களில் அமெரிக்க ராணுவ தளங்கள் உள்ளன. இதில் அல்-ஆசாத் விமானப்படை தளம், எர்பில் ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது கடந்த 8-ந் தேதி ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. தங்கள் நாட்டு ராணுவ தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா கொன்றதற்கு பதிலடியாக ஈரான் இந்த தாக்குதலை நடத்தியது.

அல்-ஆசாத் விமானப்படை தளத்தை 17 ஏவுகணைகளும், எர்பில் தளத்தை 5 ஏவுகணைகளும் தாக்கியதாக கூறிய ஈரான், இந்த தாக்குதலில் 80 அமெரிக்க வீரர்கள் பலியானதாக தெரிவித்தது.

ஆனால், தங்கள் படை தளங்கள் தாக்கப்பட்டதை ஒப்புக்கொண்ட அமெரிக்கா, உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறியது.

ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதை இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டித்தன.

இதனால் ஈரான்-அமெரிக்கா இடையே பயங்கர மோதல் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. என்றாலும் இரு தரப்பிலும் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், ஈராக்கில் தலைநகர் பாக்தாத்துக்கு வடக்கே 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பலாட் விமானப்படை தளத்தில் உள்ள அமெரிக்க படை தளத்தின் மீது நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. மொத்தம் 8 கட்யுஷா ரக ஏவுகணைகள் வீசப்பட்டன.

இந்த விமானப்படை தளத்தில் முன்பு அமெரிக்க படையினர் முகாமிட்டு இருந்ததாகவும், ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்கள் அந்த தளத்தை காலி செய்துவிட்டு சென்றுவிட்டதாகவும் ஈராக் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

சில ஏவுகணைகள் பலாட் விமானப்படை தளத்தின் ஓடுபாதையில் விழுந்து வெடித்ததாகவும், ஒரு ஏவுகணை நுழைவுவாயில் பகுதியை தாக்கியதாகவும் சலாஹுதின் மாகாண போலீஸ் அதிகாரி முகமது காலில் தெரிவித்தார். ஏவுகணை விழுந்து வெடித்ததில் நுழைவு வாயில் பகுதியில் இருந்த ஈராக் ராணுவ வீரர்கள் 4 பேர் காயம் அடைந்ததாகவும் அவர் கூறினார்.

இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com