

இஸ்லமாபாத்,
பாகிஸ்தானில் தனது 14 வயதிலேயே பெண் கல்விக்கு ஆதரவாக துணிச்சலுடன் குரல் கொடுத்து, தலீபான் பயங்கரவாதிகளின் கோபத்துக்கு ஆளானவர் மலாலா. ஒரு கட்டத்தில் வெறுப்பின் உச்சத்தில் அவரை தலீபான் பயங்கரவாதிகள் 2012-ம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டனர்.மரணத்தின் விளிம்புக்கு சென்ற அவர் பின்னர் இங்கிலாந்து அழைத்து செல்லப்பட்டு, சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்தார்.
தற்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்து வருகிற அவர், 6 ஆண்டுகளுக்கு பிறகு 4 நாள் பயணமாக கடந்த 29-ந் தேதி பாகிஸ்தானுக்கு சென்றார். இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் சென்று இறங்கிய அவருக்கு உற்சாக வரவேற்பு தரப்பட்டது. நேற்று அவர் ஸ்வாட் பகுதியில் அமைந்து உள்ள மகன்பாக் என்ற தனது சொந்த ஊருக்கு சென்றார். அவருடன் அவரது பெற்றோர், உடன்பிறப்புகள் மட்டுமல்லாமல், தகவல்துறை ராஜாங்க மந்திரி மரியம் அவுரங்கசீப்பும் உடன் சென்றார். அங்கு மலாலா தன் தோழிகள், ஆசிரிய, ஆசிரியைகளை சந்தித்துப் பேசினார்.
தனது நான்கு நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு மலாலா இன்று லண்டன் புறப்பட்டுச் சென்றார். இஸ்லமபாத்தில் உள்ள விமான நிலையத்தில் தனது பெற்றோர்களுடன் மலர்ந்த முகத்துடன் மலாலா செல்லும் காட்சிகள் பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியானது. தற்போது, லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மலாலா தனது படிப்பு முடிந்ததும் பாகிஸ்தான் திரும்ப உள்ளதாக தெரிவித்து உள்ளார்.