இந்தியாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வரவில்லை: பாகிஸ்தான் மந்திரி

இந்தியாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை என்று பாகிஸ்தான் மந்திரி முசாதிக் மாலிக் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மந்திரி
பாகிஸ்தான் மந்திரி
Published on: 

டெல்லியில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உரையாடல் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பு துறை மந்திரி முசாதிக் மாலிக் இந்தியா வந்திருந்தார். இந்தநிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தனது இந்திய பயணம் எஸ்.சி.ஓ. மாநாட்டில் பங்கேற்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது என்றும், இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக தான் இந்தியா வரவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், இந்தியாவுடன் இருதரப்பு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக இருப்பதாகவும், அதற்கு முறையான அழைப்பும் பேச்சுவார்த்தைக்கான நடைமுறையும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.

பயங்கரவாதம், சிந்து நதி ஒப்பந்தம் குறித்து கேள்வி

இதற்கிடையே, இந்தியாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆனால், இந்த விவகாரங்களுக்கு நேரடியாக பதிலளிக்காமல், தனது பயணம் பலதரப்பு அமைப்பான எஸ்.சி.ஓ. மாநாட்டுடன் தொடர்புடையது என்று குறிப்பிட்டார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு கடந்த ஆண்டு ஏற்பட்ட ராணுவ மோதலுக்குப் பிறகு தொடர்ந்து பதற்றமான நிலையில் உள்ளது. இந்த சூழலில், இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வரவில்லை என்று பாகிஸ்தான் மந்திரி தெரிவித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.

இதற்கிடையே, டெல்லியில் நடைபெற்ற எஸ்.சி.ஓ. மாநாட்டையொட்டி இந்தியா - பாகிஸ்தான் இடையே எந்தவிதமான முறையான இருதரப்பு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று இந்திய அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

X