

ரியாத்,
இஸ்லாமிய நாட்காட்டியின் 9-வது மாதமான ‘ரமலான்’ அல்லது ‘ரம்ஜான்’ மாதம், இஸ்லாமியர்களுக்கு மிகவும் முக்கியமான மற்றும் புனிதமான மாதமாக திகழ்கிறது. இந்த மாதத்தில்தான், இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரான் அருளப்பட்டதாக கூறப்படுகிறது.
ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் தங்களது கடமைகளில் ஒன்றான நோன்பு இருப்பது வழக்கமாகும். இந்த மாதத்தின் இறுதியில் வானில் தோன்றும் பிறையின் அடிப்படையில் ‘ஈத் அல்-பித்ர்’ (Eid al-Fitr) எனப்படும் ‘ரம்ஜான்’ பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதன்படி, வளைகுடா நாடுகளில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. பிறை தெரிவதில் உள்ள மாறுபாடு காரணமாக இந்தியா, மலேசியா உள்ளிட்ட சில நாடுகளில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
முன்னதாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அதனை தொடர்ந்து வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் மேகம் சூழ்ந்துள்ளது.
இந்த சூழலுக்கு மத்தியில் இன்று வளைகுடா நாடுகளில் அமைதியான முறையில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித தளமான மெக்காவில் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் தொழுகையை நிறைவேற்றினர்.
லெபனான் நாட்டில் இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள மசூதியில் ஏராளமான மக்கள் திரண்டு அமைதிக்காக பிரார்த்தனை செய்தனர். இதே போல் கத்தார், பஹ்ரைன் உள்ளிட்ட அனைத்து வளைகுடா நாடுகளிலும் இன்று ரம்ஜான் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.
மேலும், போரால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த காசா மக்கள், வீதிகளில் திரண்டு ஈகைத் திருநாள் சிறப்பு தொழுகையை மேற்கொண்டனர். அதே சமயம், ஜெருசலேம் நகரில் உள்ள புகழ் பெற்ற அல்-அக்சா மசூதியில் தொழுகை நடத்துவதற்கு, பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி, இஸ்ரேல் காவல்துறை தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.