

இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் கடும் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பொருளாதார சரிவை சமாளிக்க அந்நாட்டு அரசு பல்வேறு அதிரடி கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் சூழல் மற்றும் செங்கடல் கப்பல் போக்குவரத்து பாதிப்புகள் காரணமாக பாகிஸ்தானுக்கு கிடைக்கும் கச்சா எண்ணெய் விநியோகம் முடங்கியுள்ளது. இதையடுத்து நிலைமையை சமாளிக்க, கொரோனா காலத்தை நினைவூட்டும் வகையிலான கடுமையான கட்டுப்பாடுகளை பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
அரசு அதிகாரிகள் மற்றும் மந்திரிகளின் வாகனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் அளவு உடனடியாக 50 சதவீதம் குறைக்கப்படுகிறது. ராணுவம் மற்றும் அவசர மருத்துவ சேவைகளுக்கு மட்டுமே இதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
அரசு அதிகாரிகள் அடுத்த 3 மாதங்களுக்கு வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ள தடை விதிக்கப்படுகிறது. தவிர்க்க முடியாத சூழலில் அரசு செலவில் பயணித்தால் ‘இகானமி கிளாஸ்’ வகுப்பில் மட்டுமே பயணிக்க வேண்டும். மேலும் அரசு நிதியில் புதிய ஆடம்பர கார்கள், வாகனங்கள் மற்றும் அலுவலக தளவாட பொருட்கள் வாங்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மின்சாரம் மற்றும் எரிசக்தியை சேமிக்க நாடு முழுவதும் உள்ள வணிக வளாகங்கள், மார்க்கெட்டுகள், கடைகள் அனைத்தும் இரவு 9 மணிக்குள் மூடப்பட வேண்டும். மேலும் திருமண மண்டபங்களில் ஆடம்பரத்தை தவிர்க்க திருமண விழாக்களில் ஒரே ஒரு உணவு வகை மட்டுமே பரிமாறப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.