அரசியல் வன்முறைகள் சகிக்க முடியாதவை, அதனை கடுமையாக எதிர்க்க வேண்டும் - சுந்தர் பிச்சை

அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
அரசியல் வன்முறைகள் சகிக்க முடியாதவை, அதனை கடுமையாக எதிர்க்க வேண்டும் - சுந்தர் பிச்சை
Published on

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த சூழலில், பென்சில்வேனியா மாகாணம் பட்லர் நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பங்கேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். பொதுக்கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென கூட்டத்தில் இருந்த நபர் டிரம்ப்பை குறிவைத்து துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினார்.

இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் டொனால்டு டிரம்ப் காதில் ரத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் கூடியிருந்த மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் டிரம்ப்பை சுற்றி பாதுகாப்பு அரணாக மாறினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த டொனால்டு டிரம்புக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலமுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டொனால்டு டிரம்ப் மீதான தாக்குதலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

அந்த வகையில் கூகுள் தலைமை செயல் அதிகாரி (சி.இ.ஓ.) சுந்தர் பிச்சை, இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "அதிபர் டிரம்ப் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். இன்றைய துப்பாக்கிச் சூடு மற்றும் உயிரிழப்புகளால் நான் அதிர்ச்சியடைந்துள்ளேன். அரசியல் வன்முறைகள் சகிக்க முடியாதவை, நாம் அனைவரும் ஒன்றிணைந்து அதை கடுமையாக எதிர்க்க வேண்டும்" என்று அதில் சுந்தர் பிச்சை பதிவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com