

வாடிகன் சிட்டி,
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 11வது நாளாக இன்று நீடித்து வருகிறது. இதில், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர். உக்ரைனின் கெர்சன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன. மேலும் அந்நாட்டின் 2 அணுமின் நிலையங்களும் ரஷியா வசம் சென்றுள்ளது.
உக்ரைனில் ரஷ்ய ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இருநாட்டுப் படைவீரர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் உக்ரைனில் இரத்தமும், கண்ணீரும் ஆறாக பாய்வதாக திருத்தந்தை போப் பிரான்சிஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், உக்ரைனில் இரத்தமும், கண்ணீரும் ஆறாக பாய்கிறது. இது வெறும் ராணுவ நடவடிக்கை இல்லை. உயிரிழப்பு, பேரழிவு, துயரம் ஆகியவற்றை விதைக்கும் போர். அகதிகளுக்காக மனிதநேய நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும். மனிதாபிமான வழித்தடங்கள் உண்மையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். முற்றுகையிடப்பட்ட பகுதிகளுக்கு உதவி உத்தரவாதம் மற்றும் அணுகல் வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்று நான் இதயப்பூர்வமான வேண்டுகோள் விடுக்கிறேன் என்று அதில் போப் பிரான்சிஸ் பதிவிட்டிருந்தார்.