இந்தியாவிடம் இருந்து பெட்ரோல் வாங்கிய ரஷியா- ஏன் தெரியுமா?

இந்தியாவுக்கு வரும் ரஷிய கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவிடம் இருந்து பெட்ரோல் வாங்கிய ரஷியா- ஏன் தெரியுமா?
Published on

ரஷியாவில் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி குறித்து எரிசக்தி சந்தை ஆய்வு நிறுவனமான கெப்லர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-மேற்கு ஆசியாவில் பதற்றம் நீடித்து வரும் நிலையிலும், ரஷியாவின் 'யூரல்ஸ்' வகை கச்சா எண்ணெய் போதுமான அளவில் கிடைத்து வருகிறது. இதனால் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை அதிகரித்துள்ளன. கடந்த 29-ந் தேதி வரையிலான கணக்கின்படி, இந்தியா தினமும் 27.80 லட்சம் பீப்பாய் ரஷிய கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது. ஜூன் மாதத்தில் இது 27.30 லட்சம் பீப்பாயாக இருந்தது. இதன்படி ரஷிய கச்சா எண் ணெய் இறக்குமதி 1.8 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதி தினமும் 50.30 லட்சம் பீப்பாயாக இருந்த நிலையில், அதில் ரஷியாவின் பங்கு 55.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கச்சா எண்ணெய்

ரஷியாவில் கச்சா எண்ணெய் கிடைத்தாலும், அதை பெட்ரோல், டீசலாக மாற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் தொடர்ந்து டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் ரஷியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு அளவு குறைந்துள்ளது. ஜூலை மாதத்தில் ரஷியாவின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு அளவு தினமும் சுமார் 36 லட்சம் பீப்பாயாக குறைந்தது. வழக்கமான அளவுடன் ஒப்பிடுகையில் இது சுமார் மூன்றில் ஒரு பங்கு குறைவாகும். இதன் காரணமாக ரஷியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

முக்கிய பங்கு

இதையடுத்து உள்நாட்டு தேவையை சமாளிப்பதற்காக பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு ரஷியா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், தேவையை பூர்த்தி செய்ய பிற நாடுகளில் இருந்து பெட்ரோலை வாங் கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே இந்தியாவில் இருந்து ரஷியாவுக்கு பெட்ரோல் அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவின் குஜராத் மாநிலம் வதினார் பகுதியில் உள்ள நயாரா எனர்ஜி நிறுவனத்தில் இருந்து முதல் சரக்கு அனுப்பப்பட்டது.

பெட்ரோல் சரக்குகள்

இந்த நிறுவனத்தில் ரஷியாவின் முன்னணி எண்ணெய் நிறுவனமான ரோஸ் நெப்ட்டுக்கு முக்கிய பங்கு உள்ளது.முதல் சரக்கு கடந்த 5-ந் தேதி ரஷியாவை சென்றடைந்தது. மேலும் சில பெட்ரோல் சரக்குகள் இந்தியாவில் இருந்து ரஷியாவுக்கு செல்லும் நிலை யில் உள்ளது. இதற்கிடையே, இந்தியாவுக்கு வரும் ரஷிய கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. முன்பு ஒரு பீப் பாய்க்கு 8 முதல் 10 டாலர் வரை வழங்கப்பட்ட தள்ளுபடி தற்போது 2 முதல் 3 டாலராக குறைந்துள்ளது. இதனால் ரஷிய கச்சா எண்ணெயின் விலை சர்வதேச 'பிரென்ட்' கச்சா எண்ணெய் விலைக்கு நெருக்கமாக உயர்ந்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com