பெட்ரோல் ஏற்றுமதிக்கு 4 மாதங்களுக்கு தடை விதிக்க ரஷ்யா முடிவு

ஈரான்–அமெரிக்கா போரால் சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் ஏற்றுமதிக்கு 4 மாதங்களுக்கு தடை விதிக்க ரஷ்யா முடிவு
Published on

அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால், ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ந்தேதி அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்தன. இதையடுத்து ஈரானும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கிய பாதையாக உள்ள ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது. அந்த ஜலசந்தியை கடக்க முயன்ற சில கப்பல்களுக்கு மீது தாக்குதல் நடத்தியது. ஹோர்முஸ் ஜலசந்தியை கடந்து செல்ல அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி இல்லை என்று ஈரான் அறிவித்தது.

இதற்கிடையே, ஹோர்முஸ் ஜலசந்தியை 48 மணி நேரத்தில் திறக்காவிட்டால், ஈரானின் மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி அழிப்போம் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். அதை நிராகரித்த ஈரான், தங்களது மின் நிலையங்களை தாக்கினால் வளைகுடா நாடுகளில் உள்ள மின் நிலையங்களை தாக்குவோம் என்று தெரிவித்தது. இதற்கிடையே, டிரம்ப் விதித்த கெடு கடந்த 24-ந்தேதி காலை முடிவடைய இருந்த நிலையில், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் அதன் மின் நிலையங்கள் மீதான தாக்குதலை மேலும் 5 நாட்கள் நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்தார். ஆனால், அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்தது. மேலும், அமெரிக்கா தெரிவித்த 15 அம்ச திட்டத்தையும் நிராகரித்தது. ஆனாலும், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.

ஈரான்–அமெரிக்கா போரால் சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியிருப்பதால் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மாற்று வழியாக ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதலை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த 4 மாதங்களுக்கு எரிபொருள் ஏற்றுமதிக்கு ரஷ்யா தடை விதித்துள்ளது. மத்திய கிழக்கு போர் சூழல், சுத்திகரிப்பு நிலையங்களின் பராமரிப்பு பணிகள், எண்ணெய் சந்தையில் நிலையானற்ற தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com