பாடம் சொல்லி தராமலேயே ஆசிரியர்களுக்கு சம்பளம்; மாதம் ரூ.4 கோடி இழப்பு... இங்கல்ல பாகிஸ்தானில்

பாகிஸ்தானில் கல்லூரி மாணவிகளுக்கு பாடம் கற்று கொடுக்காமல் பேராசிரியர்களுக்கு சம்பளம் வழங்கியதில் ஊழல் நடந்துள்ள விவரம் தெரிய வந்துள்ளது.
பாடம் சொல்லி தராமலேயே ஆசிரியர்களுக்கு சம்பளம்; மாதம் ரூ.4 கோடி இழப்பு... இங்கல்ல பாகிஸ்தானில்
Published on

லாகூர்,

ஆசியாவில் மாணவ மாணவிகளுக்கு தரமிக்க கல்வி வழங்காத மோசம் நிறைந்த நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் உள்ளது. 2017-ம் ஆண்டில், பாலின சமத்துவத்தில் 2-வது மோசம் நிறைந்த நாடாக பாகிஸ்தான் தர வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது என தி நேசன் பத்திரிகை தெரிவித்து இருந்தது.

அதிலும், பெண்கள் கல்வி கற்பதில் பல தடைகள் உள்ளன. 2010-ம் ஆண்டு ஐ.நா. அறிக்கை ஒன்றின்படி, பாலின அதிகாரமளித்தலில் 94 நாடுகளில் பாகிஸ்தான் 92-ம் இடம் வகித்தது. பாலினம் தொடர்புடைய வளர்ச்சி குறியீட்டில் 146 நாடுகளில் 120 இடம் வகித்து இருந்தது.

பாகிஸ்தான் நாட்டு சமூகத்தில் ஆண் வர்க்கம் சார்ந்த விசயங்கள் வேரூன்றி காணப்படுகின்றன. ஆண்களுக்கு பணியும், சம்பளமும் வழங்கப்படும் சூழலில், வீடு, குழந்தைகளை கவனித்தல் உள்ளிட்ட சம்பளம் இல்லாத பணிக்கு பெண்கள் தள்ளப்படுகின்றனர்.

இதனால், குடும்பமோ அல்லது அரசாங்கமோ அந்நாட்டில் பெண் கல்விக்கு குறைந்த அளவு முதலீடே செய்ய கூடிய சூழல் காணப்படுகிறது.

பாலின சமத்துவமற்ற சூழலால் பெண்கள் கல்வி பெறுவதிலேயே அதிக சிரமம் உள்ளது. இதன்பின்பு, கல்வி பெறும் சூழல் அமைந்து, படித்து வருவது என்பது வேறு விசயத்தில் வரும்.

இந்த சூழலில், அந்நாட்டின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் தெற்கு வசீரிஸ்தான் மாவட்டத்தில் வேனா என்ற இடத்தில் ராணுவ அதிகாரிகள் மற்றும் பழங்குடியின தலைவர்கள் ஒத்துழைப்புடன் 2 ஆண்டுகளுக்கு முன்பு மகளிருக்கான டிகிரி கல்லூரி ஒன்று தொடங்கப்பட்டது.

இதில், பணியாற்றும் பேராசிரியர்கள் படிக்கும் மாணவிகளுக்கு கல்வி கற்று தரும் பணியை முறையாக செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மோசடியான முறையில், கல்வி பணியை செய்யாமல் பேராசிரியர்கள் மாதாமாதம் சம்பளம் வாங்கி செல்கின்றனர்.

ஆனால், அவர்கள் கல்லூரிக்கே வருவதில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், மாணவிகளுக்கு பாடம் கற்று கொடுக்காமல் பேராசிரியர்களுக்கு சம்பளம் வழங்கியதில் ஊழல் நடந்துள்ள விவரம் தெரிய வந்துள்ளது.

அந்த வகையில், மாதம் ஒன்றுக்கு சம்பளம் என்ற வகையில் ரூ.4 கோடி பாகிஸ்தான் அரசுக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com