பயங்கர வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண்: ராணுவத்தினர் மீட்பு

வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட அந்த பெண், அருகில் இருந்த ஒரு பெரிய பாறையின் மீது அமர வைக்கப்பட்டார்.
பயங்கர வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண்: ராணுவத்தினர் மீட்பு
பெண்
Published on

காத்மாண்டு,

நேபாள வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு பெண்ணை மீட்புக்குழுவினர் போராடி மீட்டு வந்து ஒரு பாறையில் அமர வைத்தனர். ராணுவத்தினர் அவருக்கு ஆறுதல் கூறித் தைரியப்படுத்தியும், அந்தப் பெண்ணால் அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை.

பெருவெள்ளம்

நேபாளத்தின் போடேகோஷி நதியில் கடந்த 26-ந்தேதி காலையில் ஏற்பட்ட பெருவெள்ளம் அந்த நாட்டின் சீன எல்லையை ஒட்டிய பிராந்தியம் முழுவதையும் சீர்குலைத்தது. போடேகோஷியின் கிளை நதியான லெண்டேயின் நீரோட்டத்தை பனிச்சரிவு ஒன்று தடுத்ததால் உருவான ஏரி உடைந்து இந்த காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வெள்ளம் மட்டுமின்றி பாறைகள், மண், சேறு என பெரும் பிரளயமே அங்கு ஏற்பட்டது.

உயிருக்கு போராடிய பெண்

இந்நிலையில், அங்குள்ள ஒரு கிராமத்தில் வெள்ள நீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதில் வீடுகள் அனைத்தும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. அப்போது, ஒரு பெண் வெள்ளத்தின் சீற்றத்தில் சிக்கி, காட்டாற்று வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி அடித்து செல்லப்பட்டார்.

இதனை பார்த்த நேபாள மீட்புக்குழுவினர் மற்றும் ராணுவ வீரர்கள் உடனடியாக செயல்பட்டனர். சீறிப்பாய்ந்த வெள்ள நீரை துணிச்சலுடன் எதிர்கொண்டு, கடுமையான போராட்டத்திற்கு பிறகு அந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர்.

பாறையில் ஆறுதல்

வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட அந்த பெண், அருகில் இருந்த ஒரு பெரிய பாறையின் மீது அமர வைக்கப்பட்டார். கண்ணிமைக்கும் நேரத்தில் தன் வீடு சின்னாபின்னமானதையும், ஒட்டுமொத்த குடும்பத்தினரும் வெள்ளத்தில் காணாமல் போனதையும் நினைத்து அவர் நிலைகுலைந்து போயிருந்தார்.

அதிர்ச்சியில் பெண்

"எல்லாவற்றையும் இழந்துவிட்டேனே... இனி நான் என்ன செய்யப் போகிறேன்?" என்று வேதனையிலும் அதிர்ச்சியிலும் அந்த பெண் அப்படியே உறைந்து போய் அமர்ந்திருந்தார்.அவரால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. இதைப் பார்த்த ராணுவ வீரர்கள், அவரது அருகில் அமர்ந்து தங்களின் கனிவான வார்த்தைகளால் ஆறுதல் கூறினார்கள்.

நாங்கள் இருக்கிறோம், உங்களுக்கு பாதுகாப்பாக துணையிருப்போம்" என்று தைரியமூட்டினர். ராணுவத்தினர் ஆறுதல் கூறிய இந்த உருக்கமான காட்சி காண்போரை நெகிழ செய்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com