

முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சி அமைந்து 4 மாதங்களில் முதல் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அதுவும் சாதாரண கும்பாபிஷேகம் அல்ல. மகா கும்பாபிஷேகமாகும்.
அந்த கும்பாபிஷேகமும், மகிமை மிக்க மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்தது தனிச் சிறப்பு. இந்த கும்பாபிஷேகத்துக்கான தொடக்கப் பணிகள் தி.மு.க. ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்த சேகர் பாபுவால் தொடங்கப்பட்டாலும், புதிதாக பொறுப்பேற்ற த.வெ.க. அரசு இந்த பணியினை திட்டமிட்டப்படி குறிப்பிட்ட நாளில் அதனை செய்து முடிக்குமா? என்ற கேள்வி இருந்தது.
ஆனால் அந்த துறையின் அமைச்சர் சீ.ரமேஷ், அதற்கு முன்பு இருந்த அறநிலையத்துறை அமைச்சர்களை விட வயது குறைவானவராக இருந்தாலும், அதாவது கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல இந்த கும்பாபிஷேக பணிகளை திட்டமிட்டதை விட சிறப்பாக செய்து முடிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த உலகிலேயே பழமையான நகரங்களில் ஒன்றான மதுரை, பாண்டிய நாட்டின் தலைநகராக இருந்தது. இந்த நகருக்கு பல பெருமைகள், அடையாளங்கள் இருந்தாலும், அதன் மணிமகுடம் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் தான். இந்த கோவிலின் நான்கு திசைகளிலும் உள்ள கோபுரங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் அமைக்கப்பட்டவை.
நான்கிலும் பழமையான கிழக்கு கோபுரம் 'சுந்தர பாண்டியன் கோபுரம்' எனப்படுகிறது. இதை மாறவர்மன் சுந்தரபாண்டியன் கட்டியதாகவும், சடையவர்மன் சுந்தரபாண்டியன் கட்டியதாகவும் இரு வேறு கருத்துகள் உள்ளன. மேற்கு கோபுரத்தை சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1323-ல் கட்டி முடித்தார். தெற்கு கோபுரம் விசுவநாத நாயக்கர் காலத்தில் கி.பி. 1559-ல் சிராமலை செவ்வந்தி மூர்த்திச் செட்டியாரால் கட்டப்பட்டது. 160 அடி உயரமுள்ள இதுவே நான்கிலும் உயரமானது.
வடக்கு கோபுரத்தின் கட்டுமானம் முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் தொடங்கி, 19-ம் நூற்றாண்டில் நாட்டுக்கோட்டை செட்டியார்களால் முடிக்கப்பட்டது. கட்டுமான கலையில் பல சிறப்புகளைப் பெற்றுள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கடந்த 6-ந்தேதி மகா கணபதி ஹோமத்தோடு நிகழ்ச்சி தொடங்கியது. தினமும் ஒரு மங்கல நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று அதிகாலை 3.45 மணிக்கு யாகசாலை பூஜை நடந்தது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கலசங்கள் 4 ராஜகோபுரங்கள் உள்பட 12 கோபுரங்கள், விமானங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட பிறகு, சடங்குகளின்படி 7.40 மணிக்கு கோபுரங்களுக்கும், 8.10 மணிக்கு மூலவர் மீனாட்சி அம்மனுக்கும், 8.50 மணிக்கு சுந்தரேசுவரருக்கும் புனித நீரால் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
அந்த நேரத்தில் சமஸ்கிருதத்தில் வேத மந்திரங்கள் முழங்கப்பட்டன. அதன்பின் இதற்காக வரவழைக்கப்பட்ட 24 ஓதுவார்கள் கோபுரங்களிலும் சந்நிதிகளிலும் இருந்து தேவாரம், திருவாசகம், திருமுறைப் பாடல்களைப் பாடினர். கோவிலில் பக்தி முழக்கத்துடன் தமிழ் மணம் கமழ்ந்தது.
இதற்கு ஏற்பாடு செய்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ், கும்பாபிஷேகத்துக்கு வந்திருந்த பக்தர்களுக்கு ஒரு குறையும் இல்லாமல் நல்ல வசதிகளைச் செய்து கொடுத்ததற்காக பக்தர்களின் பாராட்டைப் பெற்றார். லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தும் மிக வசதியாக, எந்தச் சிரமமும் இல்லாமல் வழிபட்டு, கும்பாபிஷேகமும் ஒரு குறையும் இல்லாமல் எல்லாம் நிறைவாக நடந்து முடிந்தது.