

சென்னை,
முதல்-அமைச்சர் விஜய்யின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று கவர்னர் உரையுடன் தொடங்கியது. கவர்னர் உரையுடன்தான் கூட்டம் தொடங்கவேண்டும் என்பது மரபாக இருந்தாலும், முன்னாள் கவர்னர் ஆர்.என்.ரவி 2023-ம் ஆண்டு முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் தொடர்ந்து 4 ஆண்டுகள் அரசு தயாரித்த உரையை முழுமையாக வாசிக்காமல் சில பகுதிகளை விட்டுவிட்டு படித்ததோடு, அவையில் இருந்தும் வெளிநடப்பு செய்தார். 2023-ம் ஆண்டில் திராவிட மாடல் மற்றும் பெரியார், அம்பேத்கர், காமராஜர் உள்ளிட்ட பல தலைவர்களின் பெயர்கள் உரையில் இருந்ததை படிக்க மறுத்து பாதியிலேயே வெளியேறினார். 2024-ம் ஆண்டின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்படவில்லை என்று கூறி முதல் பத்தியோடு நிறுத்திவிட்டு, உரையை வாசிக்காமல் நடையை கட்டினார்.
இதேபோன்று 2025-ம் ஆண்டு கவர்னர் உரையில், அரசியல் சட்டம் மற்றும் தேசிய கீதத்துக்கு மதிப்பளிக்கப்படவில்லை என்ற காரணத்தைக் கூறி, கவர்னர் உரையை வாசிக்காமல் தவிர்த்தார். 2026-ம் ஆண்டு அதாவது இந்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தலுக்கு முன்பு அரசு தயாரித்த கவர்னர் உரையில் திருப்தியற்ற தகவல்கள் அதாவது மோசமான சட்டம்-ஒழுங்கு, போதைப்பொருள் நடமாட்டம் போன்றவை தமிழ்நாட்டில் இருப்பதாக கூறி வழக்கமான உரையை வாசிக்காமல் புறப்பட்டு சென்றார். இதற்கிடையே கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி மேற்குவங்காளத்துக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து கேரள கவர்னராக இருக்கும் ஆர்.வி.அர்லேகருக்கு கடந்த மார்ச் மாதம் 12-ந்தேதி தமிழக கவர்னர் பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டது. இதற்கு பிறகு கவர்னர் மாளிகையில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சிகளில் முதலில் வந்தே மாதரம் பாடலும், அடுத்து தேசிய கீதமும் அதற்கு அடுத்துதான் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது.
ஆனால் சட்டசபையில் கவர்னர் உரை நேற்று தொடங்கிய நேரத்தில், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், அடுத்து தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. அதற்குபிறகு கவர்னர் எதுவும் கூறாமல் தன்னுடைய உரையை வாசிக்க தொடங்கினார். ஆர்.என்.ரவி போன்று எந்த எதிர்ப்பும், சலசலப்பும் தெரிவிக்கவில்லை. த.வெ.க.வின் கொள்கை தலைவர்களான பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் பெயரை எந்த தயக்கமும் இல்லாமல் உச்சரித்தார். உரையை அவர் ஆங்கிலத்தில் வாசித்து முடித்தவுடன், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தமிழில் வாசிக்கும் வரை பொறுமையோடு அங்கு அமர்ந்திருந்தார். அவர் வாசித்து முடித்தவுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
அதன்பிறகு புன்சிரிப்புடன் அனைவரிடமும் பிரியா விடை பெற்று சென்றார். முதல்-அமைச்சரின் சாதனைகள், மத்திய அரசுக்கு விடுக்கும் கோரிக்கைகள் என எதையும் அவர் தனது உரையில் விட்டுவிட்டு படிக்காமல், பண்பட்ட தன் அரசியல் நாகரிகத்தை வெளிக்காட்டினார். கவர்னர் மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் முதலில் வந்தே மாதரம் பாடல் இசைக்கவேண்டும் என்ற நடைமுறையை கடைபிடிப்பது கவர்னரின் உரிமை, அதே சமயத்தில் கவர்னர் கலந்துகொள்ளும் தமிழக அரசின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது அரசின் உரிமை என்பதை கவர்னரும், முதல்-அமைச்சரும் பின்பற்றுவது அரசியல் மாண்பு ஆகும். ஆக தமிழ்நாட்டில் கவர்னருக்கும், அரசுக்கும் இருந்த பிணக்கு மாறி இணக்கத்துக்கான நல்ல உறவின் புதிய தொடக்கம் அமைந்திருக்கிறது. இதனை, 'தமிழ்நாடு சட்டமன்றத்தில் புதிய உதயம் தோன்றிய நாள்' என்று கவர்னர் ஆர்.வி.அர்லேகரும் பெருமிதத்தோடு கூறியிருக்கிறார்.