வேகமாக சரிந்து வரும் முட்டை விலை

போர் காரணமாக, தமிழகத்தில் முட்டை விலை சரிந்து வருகிறது.
வேகமாக சரிந்து வரும் முட்டை விலை
Published on

அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தொடங்கிய தாக்குதல் இப்போது போராக உருவெடுத்திருக்கிறது. ஈரானும், தனது பங்கிற்கு வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலரை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இதனால் இந்தியாவிலும் பெட்ரோல்-டீசல் விலை உயரும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் பங்குச்சந்தை வீழ்ச்சி, தங்கம் விலை உயர்வு என்ற பிரச்சினை இந்திய பொருளாதாரத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் இந்த போர் காரணமாக, தமிழகத்தில் முட்டை விலை சரிந்து வருகிறது. தமிழ்நாடு முட்டை உற்பத்தியிலும் ஏற்றம் கண்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதிலும் தனி முத்திரை பதித்து வந்தது.

Also Read
சிறப்பு நிதி எனும் திமுகவின் தேர்தல் கால சித்து விளையாட்டுகள் எடுபடாது - டிடிவி தினகரன்
வேகமாக சரிந்து வரும் முட்டை விலை

கோழி வளர்ப்பை தமிழக அரசும் ஊக்குவித்து வருவதால், அது விவசாயிகளுக்கு நல்ல உபவருமானத்தை தருகிறது. கடந்த 2025-ம் ஆண்டில் உலகளவில் முட்டை ஏற்றுமதியில் 2.6 சதவீத பங்களிப்புடன் இந்தியா 10-வது இடத்தில் இருக்கிறது. 2024-ம் ஆண்டில் இந்தியா 13-வது இடத்தில் இருந்து இப்போது ஏறுமுகம் கண்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம் தமிழ்நாடு தான். கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையில் இந்தியா 162.60 மில்லியன் டாலர் மதிப்புக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,478.86 கோடி) கோழி முட்டையை ஏற்றுமதி செய்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 109 சதவீதம் அதிகமாகும். இந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்படும் மொத்த ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு மட்டும் 91.51 சதவீதம் ஆக உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.1,355.90 கோடி. அதிலும் நாட்டின் மொத்த முட்டை ஏற்றுமதியில் நாமக்கல் மாவட்டம் மட்டும் 83.42 சதவீத பங்களிப்பை தந்து முதலிடத்தில் இருக்கிறது.

Also Read
ஊர்ப்புற நூலகர்களைப் பணி நிரந்தரம் செய்து, ஊதிய உயர்வு வழங்க அரசாணை வெளியிட வேண்டும் - சீமான்
வேகமாக சரிந்து வரும் முட்டை விலை

அதாவது நாமக்கல் மாவட்டத்தின் முட்டை ஏற்றுமதி கடந்த ஆண்டைவிட இருமடங்காக உயர்ந்து 135.64 மில்லியன் டாலராக (ரூ.1,234.42 கோடி) இருக்கிறது. கோழி பண்ணை மற்றும் முட்டை தொழில் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதோடு, அரசுக்கும் வரி வருவாயை வாரி வழங்குகிறது. நாமக்கல்லில் இருந்து வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி சிறப்பாக நடந்து வந்ததால், நமது உள்ளூர் சந்தையில் முட்டை விலை இதுவரை வரலாற்றில் இல்லாத அளவாக மொத்த விலையிலேயே இந்தாண்டு ரூ.6 வரை உயர்ந்தது. அதனால் உற்பத்தியாளர்களும் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தனர். ஆனால் இப்போது அது நீடிக்காமல் போய்விட்டது.

Also Read
என்னையே என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை - நிதி அகர்வால்
வேகமாக சரிந்து வரும் முட்டை விலை

ஏனென்றால் நாமக்கல்லில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பெரும்பாலான முட்டைகள் ஐக்கிய அமீரகம், சவுதி அரேபியா ஆகிய வளைகுடா நாடுகளுக்கு தான் அனுப்பப்பட்டு வந்தது. தற்போது அங்கு போர் மேகம் சூழ்ந்துள்ளதால் முட்டை ஏற்றுமதி அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் உற்பத்தியாளர்கள், அந்த தேக்கம் அடைந்த முட்டைகளை குளிர்பதன கிடங்கில் சேமித்து வைக்கின்றனர். முட்டை பவுடர் உற்பத்தியிலும் கவனம் செலுத்துகின்றனர். ஏற்றுமதி தடைபட்டதால் தமிழகத்தில் முட்டை விலை ரூ.4.30 என்று சரிந்து விட்டது. அதோடு தமிழகம், கேரளாவில் கிறிஸ்தவர்களின் தவக்காலம், முஸ்லிம்களின் ரம்ஜான் நோன்பு காரணமாக முட்டை நுகர்வு கணிசமாக குறைந்துள்ளதால் இன்னும் முட்டை விலை சரியும் என்று உற்பத்தியாளர்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com