

சென்னை,
அரசியல், சினிமாவில் 1997-ல் இருந்து 2012-ம் ஆண்டுக்குள் பிறந்த 'ஜென் சி'யின் ஆதிக்கமே இருக்கிறது. கடந்த காலங்களில் பெண்கள் வாக்கு வங்கியையும், மூத்தவர்கள், நடுத்தர வயதினரின் வாக்கு வங்கிகளையுமே குறிவைத்து அரசியல் கட்சியினர் தேர்தலை சந்தித்தார்கள். ஆனால் இந்த நிலை இப்போது மாறிவிட்டது. 'ஜென் சி' தலைமுறையினர்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல் இதுவரை அவர்கள் பக்கமே திரும்பாத சினிமாத்துறையினரும் இப்போது அவர்கள் பற்றி பேசத் தொடங்கிவிட்டார்கள். எடுத்துக்காட்டாக பிரபல நடிகையும், எம்.பி.யுமான கங்கனா ரனாவத் 'ஜென் சி' தலைமுறையினர் நாட்டின் பலம். நாட்டின் மிகப்பெரிய சொத்து. இந்த இளம் தலைமுறையினர் நமது கலாசாரம் மற்றும் அடையாளத்தின் தூதர்களாக உருவெடுத்து வருகிறார்கள் என்பதில் நம் அனைவருக்கும் அதிக மகிழ்ச்சி என்று மிகவும் பெருமையுடன் கூறியிருக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ். தலைவரான மோகன் பகவத்தும், 'ஜென் சி' போராட்டத்தின் கோரிக்கைகளெல்லாம் நிறைவேற்றப்பட வேண்டியது என்று பேசியது அனைவரையும் உற்றுப் பார்க்க வைத்துவிட்டது. 'ஜென் சி'யின் சக்தி டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி கூட்டத்தில் வெளிப்பட்டது என்றாலும், பிரதமர் மோடி முதல் அனைத்து தலைவர்களையும் அது உணர வைத்தது. கடந்த 12 ஆண்டுகளாக மலையே சாய்ந்து விழுந்தாலும் நிலை குலையாமல் இருந்து, எதற்கும் அடிபணியாத பிரதமர் மோடியையே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டம் அசைத்துவிட்டது. போராட்டக்காரர்களின் பிரதான கோரிக்கையை ஏற்று தனது மந்திரி சபையில் நீண்டகாலம் அங்கம் வகித்த கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்ய வைத்தார்.
மேலும், வினாத்தாள் கசிவு குற்றங்களுக்காக கடும் தண்டனை விதிக்கும் வகையில் ஏற்கனவே இருந்த சட்டத்தைத் திருத்தம் செய்து புதிதாக ஒரு சட்டத்தையும் இயற்றினார். வினாத்தாள் கசிவு ஏற்படாமல் தடுக்கவேண்டிய வழிகளை ஆராய நந்தன் நிலேகனியின் தலைமையில் ஒரு நிபுணர் குழுவையும் அமைத்துள்ளார். ஆக 'ஜென் சி' போராட்டம் பிரதமரையே முழுமையாக களத்தில் இறங்க வைத்துவிட்டது. இதற்கு காரணம் இப்போது 15 முதல் 29 வயது வரையிலான இளைஞர் பட்டாளம் 37 கோடியே 10 லட்சம் பேர் இருக்கிறார்கள். இவர்கள்தான் 2029-ம் ஆண்டு தேர்தலில் அசைக்க முடியாத வாக்கு வங்கியாக இருப்பார்கள். அதனால்தான் இப்போது அவர்களை தங்கள் பக்கம் இழுக்க அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு வருகின்றன.
முதல் முறையாக 'ஜென் சி' தலைமுறையை சேர்ந்தவர்கள் சுதந்திர தின விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்க முக்கியத்துவம் கொடுத்து அழைக்கப்பட்டு இருந்தனர். பிரதமர் மோடி, டெல்லி ஐ.ஐ.டி.யில் நடந்த 57-வது பட்டமளிப்பு விழாவில் பேசும்போது, "உங்களுக்கு முன்பு உள்ள சவால்களையெல்லாம் கிடைத்த வாய்ப்புகளாக மாற்றுங்கள். வாழ்க்கையில் கடினமான சவால்களெல்லாம் பாடத்திட்டத்துக்கு வெளியேதான் இருக்கிறது. உண்மையான வெற்றி என்பது தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்களுக்கு பதில் அளிப்பதோடு முடிந்துவிடவில்லை. சமுதாயத்தில் உள்ள பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றை தீர்ப்பதில்தான் இருக்கிறது" என்பது போன்ற கருத்துகளை சொல்லி அவர்களோடு தன்னை இணைத்துக்கொள்ளும் முழு முயற்சியில் ஈடுபடுத்திக்கொண்டதை அவருடைய பேச்சு தொனித்தது. ஆக சமுதாயமே இப்போது 'ஜென் சி' பக்கம் செல்லும் நடவடிக்கைகளில் இறங்கிவிட்டது.