மழலை குரலில் தமிழ் பேசிய இந்தி குழந்தைகள்..!

மழலைகள் பிஞ்சு குரலில் செவிகளுக்கு திகட்டாத தமிழ்மொழியில் பேசியது கேட்பவர்களை புல்லரிக்க வைத்தது.
மழலை குரலில் தமிழ் பேசிய இந்தி குழந்தைகள்..!
Published on

யாமறிந்த மொழிகளில் தமிழ் மொழிபோல இனிதாவது எங்கும் காணோம் என்பது மகாகவி பாரதியாரின் பொன் வரிகளாகும். அதேபோல பிரதமர் நரேந்திர மோடியும் தமிழ்மொழிக்கு புகழாரம் சூட்டி, தமிழில் உள்ள சிறப்புகளை மேற்கோள் காட்டி வருகிறார்.

அவர் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று மனதின் குரல் என்ற தலைப்பில் ரேடியோவில் உரையாற்றுவது வழக்கம். அந்தவகையில், கடந்த ஆண்டின் இறுதி உரையாக டிசம்பர் மாதம் 28-ந்தேதி நாட்டு மக்களிடையே ரேடியோ மூலம் பேசினார். இது அவருடைய 129-வது உரையாகும். இந்த உரையிலும் அவர் தமிழ்மொழிக்கு மிகவும் புகழ் சேர்க்கும் வகையில் பேசினார்.

தமிழ்நாட்டுக்கும், காசிக்கும் இடையே பழங்காலம் முதல் ஆன்மிக மற்றும் கலாசார உறவுகள் இருப்பதற்கு பல சரித்திர சான்றுகள் இருக்கிறது. பல இலக்கியங்களிலும் இதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. இதையொட்டி மத்திய கல்வி அமைச்சகமும், உத்தரபிரதேச அரசும் இணைந்து காசி தமிழ் சங்கமம் நிகழ்வை கடந்த 2022-ம் ஆண்டு முதல் நடத்தி வருகின்றன.

கடந்த ஆண்டு வாரணாசியில் கங்கை நதிக்கரையோரம் அமைந்துள்ள நமோகாட் பகுதியில் காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்வு தமிழ் கற்போம், தமிழை கற்றுக்கொள்வோம் என்ற கருப்பொருளுடன் டிசம்பர் 2-ந்தேதி முதல் நடந்தது. கடந்த ஆண்டு மிக சிறப்பாக மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சார்பில் இந்தியிலும், தமிழிலும் புலமை பெற்ற 50 ஆசிரியர்கள் உத்தரபிரதேசத்தில் உள்ள 50 பள்ளிகளுக்கு சென்று அங்குள்ள 1,500 இந்தி மாணவர்களுக்கு ஆரம்ப தமிழை கற்றுக்கொடுத்தனர்.

இதுபோல பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்கள் உள்பட அந்த மாநிலத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து நமது கலாசாரம், ஆன்மிகம் மற்றும் தமிழ்மொழியின் சிறப்பை பிரதிபலிக்கும் பல இடங்களை பார்வையிட்டனர்.

தமிழ்நாட்டிலும் இருந்து மாணவர்கள் காசி சங்கமம் நிகழ்வுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியை சேர்ந்த இந்தியை தாய் மொழியாகக் கொண்ட குழந்தைகள் தமிழில் பேசும் ஒலிக்குறிப்பை ஒலிக்க செய்து நாட்டு மக்களை கேட்க செய்தார். அந்த மழலைகள் பிஞ்சு குரலில் செவிகளுக்கு திகட்டாத தமிழ்மொழியில் பேசியது கேட்பவர்களை புல்லரிக்க வைத்தது.

அவர் மேலும் பேசும்போது, இந்த குழந்தைகளின் தாய்மொழி இந்தி, ஆனால் தமிழ்மொழியுடன் கொண்ட ஈடுபாடு அவர்களை தமிழ் கற்க உத்வேகப்படுத்தியுள்ளது. தமிழ்மொழி உலகின் பழமையான மொழி. தமிழ் இலக்கியம் மிகவும் வளமானது. காசி தமிழ் சங்கமத்தில் பங்கெடுத்துக்கொள்ளுங்கள் என்று நான் மனதின் குரலில் வேண்டிக்கொண்டு இருந்தேன்.

இன்று நாட்டின் பிற பகுதிகளிலும் கூட குழந்தைகள், இளைஞர்கள் மத்தியில் தமிழ் மீதான ஆர்வம் அதிகரித்து இருக்கிறது. இதுதான் மொழியின் பலம், இதுவே பாரதத்தின் ஒற்றுமை என்று கூறியது தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும் ஏன் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்ப்பதாக இருந்தது.

வாரணாசி மட்டுமல்ல பிஜி தீவுகளில் ரகி-ரகி பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் முதன் முறையாக தமிழ் தினம் கொண்டாடப்பட்டதும் கடல் கடந்து தமிழ்மொழி புகழ் கொடியை நாட்டி வருகிறது என்பதற்கு மகத்தான சான்றாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com