

மும்பை,
சிவசேனா கட்சி பெயர், சின்னத்தை ஷிண்டே தரப்புக்கு வழங்கிய தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரே தாக்கல் செய்த மனு அவசர வழக்காக இன்று விசாரிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் அதிரடி
மராட்டியத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆனால் தேர்தலுக்கு பிறகு முதல்-மந்திரி பதவியை இரு கட்சிகளும் தலா 2 ஆண்டு காலம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சிவசேனா விடாப்பிடியாக கூறியது. இதற்கு உடன்பட பா.ஜனதா மறுத்ததால், இந்த கூட்டணி முறித்தது.
சிவசேனா கட்சி கொள்கை வேறுபாடு கொண்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அரசை அமைத்து அரசியல் அரங்கை வியப்பில் ஆழ்த்தியது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. சிவசேனாவில் பிளவு ஏற்பட்டதால் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்ந்து, பா.ஜனதா ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சி அமைத்தது.
இந்த விவகாரம் தொடர்புடைய மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
இதற்கிடையே மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தரப்பு தான் உண்மையான சிவசேனா என்ற முடிவை தேர்தல் ஆணையம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் சிவசேனா கட்சி பெயர், கட்சியின் 'வில்-அம்பு' சின்னம் ஷிண்டே தரப்புக்கு சென்றுள்ளது. இது உத்தவ் தாக்கரே அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, உத்தவ் தாக்கரே சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அடிமட்ட தொண்டர்களின் ஆதரவு உத்தவ் தாக்கரேக்கு இருக்கும்போது அவர்களின் கருத்துக்களை ஆராயாமல், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியை அதிகாரப்பூர்வ சிவசேனா கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது தவறானது. எனவே, தேர்தல் ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது அவசர வழக்காக விசாரிக்க உத்தவ் தாக்கரே தரப்பு வலியுறுத்தியபோதிலும், விதிகள் அனைவருக்கும் சமமானது, வரிசைப்படி வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
வங்கி கணக்கை எடுத்து கொள்வார்கள்
இதனிடையே, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன், உத்தவ் தாக்கரே சார்பில் மூத்த வக்கீல் கபில் சிபல் நேற்று ஆஜராகி, தேர்தல் ஆணைய உத்தரவை தொடர்ந்து சட்டப்பேரவையில் சிவசேனா அலுவலகத்தை ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் எடுத்து கொண்டனர். தேர்தல் ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்காவிட்டால், விரைவில் கட்சியின் வங்கி கணக்கையும் எடுத்து கொள்வார்கள். எனவே, உத்தவ் தாக்கரே சார்பில் தாக்கல் செய்துள்ள மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார்.
இதற்கு ஏக்நாத் ஷிண்டே சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் நீரஜ் கிஷன் கவுல், உத்தவ் தாக்கரேவின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க கூடாது என ஆட்சேபனை தெரிவித்து, மும்பை ஐகோர்ட்டு விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதற்கு ஆட்சேபனை தெரிவித்த கபில் சிபல், உத்தவ் தாக்கரே மனுவை இப்போதே விசாரிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
இன்று விசாரிக்க சம்மதம்
இதையடுத்து தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், "உத்தவ் தாக்கரே தரப்பு மனுவை படித்து பார்க்க நீதிபதிகளுக்கு நேரம் தேவை. எனவே இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்" என தெரிவித்தார்.
இது உத்தவ் தாக்கரே தரப்புக்கு ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே ஏக்நாத் ஷிண்டே அணியினர் தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதனால் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற உள்ள சிவசேனா வழக்கு விசாரணை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
----------