கத்தார் உலகக்கோப்பையில் 'வானவில் நிற டிசர்ட்டில்' மைதானத்திற்குள் நுழைய முயன்ற நபர் மர்ம மரணம்

2022 உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது.
Published on

 தோஹா,

உலகக்கோப்பை கால்பந்து போட்டி உலகின் மிகப்பெரிய மற்றும் பிரபலமான விளையாட்டில் முதல் இடத்தில் உள்ளது. கால்பந்து விளையாட்டிற்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளம் உள்ளது. இதனிடையே, 2022 உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடர் மத்திய கிழக்கு நாடான கத்தாரில் நடைபெறுகிறது. அதேவேளை, கத்தார் நாட்டில் போட்டி நடைபெறுவதில் துவக்கம் முதலே பெரும் சர்ச்சைகள் நிலவி வருகிறது.

இதனிடையே, கடந்த நவம்பர் 22-ம் தேதி கத்தாரின் அல் ரியான் மைதானத்தில் அமெரிக்கா - வெல்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இப்போட்டியை காண அமெரிக்க பத்திரிக்கையாளர் கிராண்ட் வெல்ஹ் (வயது 48) அல் ரியான் மைதானத்திற்கு சென்றார்.

அவர் 'வானவில் நிற டிசர்ட்' அணிந்து அமைதானத்திற்குள் செல்ல முயற்சித்தார். அப்போது அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

'வானவில் நிற டிசர்ட்' எல்ஜிபிடி எனப்படும் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவாகதாக கூறப்படுகிறது. இதனால், பத்திரிக்கையாளர் கிராண்டை தடுத்து நிறுத்திய கத்தார் போலீசார் மைதானத்திற்குள் நுழைய வேண்டுமானால் வானவில் நிற டிசர்ட்டை கழற்றிவிட்டு வேறு உடை அணிய வேண்டும் என கூறியுள்ளனர். பின்னர், பத்திரிக்கையாளர் கிராண்ட் இடம் கத்தார் போலீசார் விசாரணை நடத்தினர். இறுதியில் 30 நிமிடங்களுக்கு பின் டிசர்ட்டை மாற்றிய பின் பத்திரிக்கையாளர் கிராண்டை கத்தார் போலீசார் மைதானத்திற்குள் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கிராண்ட் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் கருத்து பதிவிட்டார். அவரது பதிவு உலக அளவில் பேசுபொருளானது.

இந்நிலையில், பத்திரிக்கையாளர் கிராண்ட் வெல்ஹ் கத்தாரில் மர்மமான முறை உயிரிழந்துள்ளார். நேற்று அர்ஜெண்டினா - நெதர்லாந்து இடையேயான கால்பந்துபோட்டி நடைபெற்றது.

இந்த போட்டி கத்தாரின் லுசியல் ஐகோனிக் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை காண கிராண்ட் வெல்ஹ் சென்றிருந்தார்.

அங்கு போட்டியை கண்டுகளித்துக்கொண்டிருந்தபோது கிராண்ட் வெல்ஹ் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். அவரது மரணத்திற்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. அதேவேளை கிராண்ட் வெல்ஹ்-ஐ கத்தார் அதிகாரிகள் கொலை செய்துவிட்டதாக கிராண்டின் சகோதரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வானவில் நிற டிசர்ட் அணிந்து மைதானத்திற்குள் நுழைய முயன்றதற்காக கத்தார் போலீசாரால் விசாரிக்கப்பட்ட அமெரிக்க பத்திரிக்கையாளர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com