ஐபிஎல் - கோலி அபார ஆட்டம்... ஐதராபாத்தை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் துவங்கிய பெங்களூரு

பெங்களூரு தரப்பில் அதிரடியாக ஆடிய கோலி 69 ரன்கள் அடித்தார்.
ஐபிஎல் - கோலி அபார ஆட்டம்... ஐதராபாத்தை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் துவங்கிய பெங்களூரு
Published on

பெங்களூரு,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்கி மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி, முன்னாள் சாம்பியன் ஐதராபாத் அணியை எதிர்கொண்டது.

இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் பெங்களூரு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஐதராபாத் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும் அந்த அணியில் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடினார். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்கவிட்ட அவர் அரைசதம் அடித்து அசத்தினார். இஷான் கிஷன் 38 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Also Read
ஐபிஎல்: சென்னை - பஞ்சாப் போட்டி - டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு
ஐபிஎல் - கோலி அபார ஆட்டம்... ஐதராபாத்தை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் துவங்கிய பெங்களூரு

பின்னர் வந்த அனிகேத் சர்மா சிறப்பாக விளையாடி 43 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணியில் ஜேக்கப் டஃபி, ஷெப்பர்ட் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 202 ரன்கள் இலக்கை நோக்கி பெங்களூரு அணி ஆடியது. தொடக்க வீரர்களாக கோலி மற்றும் பில் சால்ட் களமிறங்கினர். இதில் பில் சால்ட் 8 (7) ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் கோலியுடன் ஜோடி சேர்ந்த படிக்கல், ஐதராபாத் அணியின் பந்துவீச்சை பவுண்டரி, சிக்சருக்கு பறக்கவிட்டார். அதிரடியாக ஆடிய அவர் 21 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.

மறுமுனையில் இருந்த கோலியும் அதிரடி காட்ட, ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. அப்போது 61 (26) ரன்கள் எடுத்திருந்த படிக்கல் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் கோலியுடன் கேப்டன் ரஜத் படிதார் ஜோடி சேர்ந்தார். இருவரும் ஐதராபாத் அணியின் பந்துவீச்சை பவுண்டரி, சிக்சருக்கு பறக்கவிட்டனர்.

அப்போது 12 பந்துகளில் 31 ரன்கள் எடுத்திருந்த ரஜத் படிதார் தனது விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து களமிறங்கிய ஜித்தேஷ் சர்மா அடுத்த பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். ஒருபுறம் நிலைத்துநின்று ஆடிய கோலி 33 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.

இறுதியில், 15.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 202 என்ற இமாலய இலக்கை எளிதாக எட்டி பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. பெங்களூரு தரப்பில் கோலி 69(38) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஐதராபாத் தரப்பில் டேவிட் பெய்ன் 2 விக்கெட்டுகள் எடுத்தார். இதன் மூலம் பெங்களூரு அணி தொடரை வெற்றியுடன் துவங்கி இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com