

விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி செஞ்சுரி போட்டு பிரமாதப்படுத்தினார். அவர் 81 ரன்கள் எடுத்த போது, அவரது ஒட்டுமொத்த ரன் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தொட்டது. உலக அரங்கில் இந்த மைல்கல்லை எட்டிய 13வது வீரர் கோலி ஆவார். அத்துடன் 10 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்தவர் என்ற புதிய சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார்.
213 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள விராட் கோலி அதில் 205 இன்னிங்சில் பேட்டிங் செய்து இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்பு இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் 259 இன்னிங்சில் இந்த இலக்கை எட்டியதே அதிவேகமாக இருந்தது. தெண்டுல்கர் வசம் 17 ஆண்டுகளாக இருந்த இந்த சாதனையை கோலி தட்டிப்பறித்துள்ளார்.
10 ஆயிரம் ரன்களை எட்டுவதற்கு கோலி 10,813 பந்துகளை சந்தித்து இருக்கிறார். இதுவும் ஒரு சாதனை தான். இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயசூர்யா 11,296 பந்துகளில் இந்த ரன்களை எட்டியதே முந்தைய சிறப்பானதாக இருந்தது.