

சென்னை,
45 வயதான தோனி, ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
முன்னொரு காலத்தில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்தவர் சச்சின் டெண்டுல்கர். அவரது ஆட்டத்தை காண இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆர்வம் காட்டுவார்கள். சச்சின் அவுட்டானால், ”அவ்வளவுதான்... இனி இந்திய அணி வெற்றிபெறாது..” என ரசிகர்கள் டிவியை ஆப் செய்துவிடுவார்கள். அந்த அளவுக்கு அவரது ஆட்டத்திறன் இருந்தது.
அவ்வாறு டிவியை ஆப் செய்தவர்களுக்கு.. பொறுங்கள்.. ’நான் இருக்கும் வரை போட்டி முடிந்துவிடாது..’ என்றும் கூறுவது போல் களத்தில் இறங்கி அதிரடி காட்டி அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுப்பவர்தான் மகேந்திர சிங் தோனி. தோனி களத்தில் இருக்கும் வரை இந்திய அணி வெற்றி பெறும் என்று ரசிகர்கள் நூறு சதவீத நம்பிக்கை கொண்டு ஆட்டத்தை பார்ப்பார்கள். அவ்வாறு இக்கட்டான சூழலில் அணியை சரிவில் இருந்து மீட்டு, பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார்.
’கேப்டன் கூல்’ என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட தோனி. கிரிக்கெட் உலகின் சிறந்த வீரராக திகழ்ந்தார். இந்திய அணியிக்கு கேப்டனாக தலைமை தாங்கி 2007-ல் டி20 உலகக்கோப்பை, 2011-ல் ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் 2013-ல் சாம்பியன்ஸ் கோப்பை என கோப்பைகளை பெற்றுக்கொடுத்துள்ளார். 2019-ம் ஆண்டுக்குப் பிறகு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், ஐபிஎல் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாடி வந்தார். இந்த நிலையில், 45 வயதான தோனி, தற்போது ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கியத் தூணாகத் திகழ்ந்த தோனியின் ஓய்வு அறிவிப்பு சென்னை மட்டுமின்றி, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் சோகமான விஷயமாகும். ஐபிஎல் தொடரில் மொத்தம் 19 ஆண்டுகள் விளையாடியுள்ள அவர், சென்னை அணிக்காக 17 ஆண்டுகள் மற்றும் புனே அணிக்கான 2 ஆண்டுகள் விளையாடி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் தோனி படைத்துள்ள சாதனைகளை பின்வருமாறு காணலாம்.
ஐபிஎல் தொடர் முதல் முறையாக கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியை வாங்கியது. தனது அணிக்காக 100 சதவீத உழைப்பை கொடுத்த தோனி, சென்னை அணிக்கு 5 முறை (2010, 2011, 2018, 2021, 2023) ஐபிஎல் கோப்பையையும், 2 முறை சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பையையும் பெற்றுக் கொடுத்தார்.
ஐபிஎல் வரலாற்றில் இன்னிங்சின் கடைசி ஓவரில் (20th Over) மட்டும் 700-க்கும் மேற்பட்ட ரன்களையும், 60-க்கும் அதிகமான சிக்ஸர்களையும் விளாசிய ஒரே பேட்ஸ்மேன் இவரே. ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை ஆட்டமிழக்காமல் (100 முறை) களத்தில் நின்ற வீரரும் இவரே.
ஐபிஎல் வரலாற்றில் ஒரு சதம் கூட அடிக்காமல் 5,000 ரன்களுக்கு மேல் குவித்த ஒரே வீரர் (அதிகபட்சம் 84) தோனி அவார். 2023-ல் சிஎஸ்கே கோப்பையை வென்றபோது தோனியின் வயது 41 ஆண்டுகள் 325 நாட்கள். ஐபிஎல் கோப்பையை வென்ற மிக வயதான கேப்டன் என்ற சாதனை இவருடையது.
ஐபிஎல் வரலாற்றில் விக்கெட் கீப்பராக 150-க்கும் மேற்பட்ட டிஸ்மிஸல்களை (கேட்ச் + ஸ்டம்பிங்) செய்த முதல் வீரர் தோனி.
ஐபிஎல் வரலாற்றில் அதிக ஸ்டம்பிங் (42+ ஸ்டம்பிங்) செய்த விக்கெட் கீப்பர் இவரே. 0.08 வினாடிகளில் ஸ்டம்பிங் செய்து உலக சாதனை படைத்ததும் ஐபிஎல் களத்தில்தான்.
ஐபிஎல் வரலாற்றில் 200-க்கும் மேற்பட்ட போட்டிகளுக்குத் தலைமை தாங்கிய ஒரே கேப்டன் தோனி. (226 போட்டிகள்-133 வெற்றிகள்] ஐபிஎல் வரலாற்றில் 11 முறை இறுதிப் போட்டியில் விளையாடிய ஒரே வீரர் தோனி ஆவார். (CSK-வுடன் 10 முறை, RPS-உடன் 1 முறை
ஒரு கேப்டனாக 12 முறை அணியை பிளே-ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். வேறு எந்த கேப்டனும் இத்தகைய சாதனையை படைக்கவில்லை.
சிஎஸ்கே அணியுடன் 17 சீசன்கள் மற்றும் 2 சீசன்கள் என மொத்தம் 19 சீசன்களை விளையாடி மொத்தம் 5439 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அவரது சராசரி 38.30 மற்றும் ஸ்ட்ரைக் ரேட்: 137.45 ஆகும்.
மொத்தப் போட்டிகள்: 278
இன்னிங்ஸ் 242
மொத்த ரன்கள் 5,439
அதிகபட்ச ரன்கள் 84* (நாட் அவுட்)
பேட்டிங் சராசரி 38.30
ஸ்ட்ரைக் ரேட் 137.45
அரைசதங்கள் (50s) 24
சதங்கள் (100s) 0
பவுண்டரிகள் (4s) 375
சிக்ஸர்கள் (6s) 264
நாட் அவுட் (Not Outs) 100
ஐபிஎல் தொடரில் இருந்து வீரராக ஓய்வு பெற்றாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆலோசகராக தோனி தொடர்வார் என சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இன்னும் ஒரு சீசன் தோனி விளையடுவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு இந்த ஓய்வு அறிவிப்பு ஏமாற்றமே.. எனினும், கிரிக்கெட்டில் இருந்து முழுவதுமாக ஒதுங்கி விடாமல், தான் விளையாடி வந்த அணியின் ஆலோசகராக புதிய பரிணாமத்தில் அவரை இனி காணலாம். இது அவரது ரசிகர்களுக்கு சற்று ஆறுதலை தரும் என்றால் அது மிகையாகாது.