3-வது டெஸ்ட்: கவேம் ஹாட்ஜ் சதம்.. சரிவில் இருந்து மீண்ட வெஸ்ட் இண்டீஸ்

image courtesy:ICC
நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 575 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது.
மவுன்ட் மாங்கானு,
நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மவுன்ட் மாங்கானுவில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து தொடக்க நாளில் ஒரு விக்கெட்டுக்கு 334 ரன்கள் எடுத்திருந்தது. டிவான் கான்வே 178 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 8 விக்கெட்டுக்கு 575 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தனது 2-வது இரட்டை சதத்தை பூர்த்தி செய்த டிவான் கான்வே 227 ரன்னில் (367 பந்து, 31 பவுண்டரி) எல்.பி.டபிள்யூ. ஆனார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணி ஆட்ட நேரம் முடிவில் விக்கெட் இழப்பின்றி 110 ரன்கள் அடித்திருந்தது. ஜான் கம்பெல் 45 ரன்களுடனும், பிரண்டன் கிங் 55 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இத்தகைய சூழலில் இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கம்பெல் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கவேம் ஹாட்ஜ் நிலைத்து விளையாடினார். மறுமுனையில் அரைசதமடித்த பிரண்டன் கிங் 63 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த வீரர்களில் டெவின் இம்லாச் 27 ரன்களிலும், அலிக் அதானஸ் 45 ரன்களிலும், ஜஸ்டின் கிரீவ்ஸ் 43 ரன்களிலும், ரோஸ்டன் சேஸ் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் கவேம் ஹாட்ஜ் சிறப்பாக ஆடி சதமடித்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார்.
3-வது நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 381 ரன்கள் அடித்துள்ளது. கவேம் ஹாட்ஜ் 109 ரன்களுடனும், ஆண்டர்சன் பிலிப் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டபி மற்றும் அஜாஸ் படேல் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
வெஸ்ட் இண்டீஸ் இன்னும் 194 ரன்கள் பின்தங்கி உள்ளது. நாளை 4-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.






