

ராவல்பிண்டி,
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் வலுவான நிலையில் உள்ளது.
பாகிஸ்தான் - இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதையடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு தொடக்க வீரர் முகமது தய்யப் ஆரிப் அதிரடி தொடக்கம் கொடுத்தார். அவர் 51 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். மற்றொரு தொடக்க வீரரான அசான் அவைஸ் 50 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார்.
அடுத்து களமிறங்கிய முகமது தாஹாவும், கேப்டன் பாபர் அசாமும் அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினர். பாபர் அசாம் 58 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முகமது தாஹா 105 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார்.
பின்னர் வந்த சல்மான் அலி ஆகா 16 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து சவுத் ஷகீலுடன் விக்கெட் கீப்பர் காஜி கோரி ஜோடி சேர்ந்தார். இந்த இணை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டது.
இதனையடுத்து முதல்நாள் ஆட்டம் முடிவில் பாகிஸ்தான் அணி 67.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்துள்ளது. போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் முன்கூட்டியே நிறுத்தப்பட்டது.
சவுத் ஷகீல் 112 பந்துகளில் 57 ரன்களுடனும், காஜி கோரி 10 பந்துகளில் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை அணியின் அசிதா பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.