

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 3 போட்டிகள் முடிவில் 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில், 4-வது ஒருநாள் போட்டி பார்படாஸ், பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 44 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து 189 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஹென்றி நிக்கோல்ஸ் (0), வில் யங் (20), நிக் கெல்லி (3) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் மார்க் சாப்மேன் அதிரடியாக விளையாடி 82 பந்துகளில் 8 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 80 ரன்கள் குவித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.
அவருடன் மைக்கேல் பிரேஸ்வெல் 32 ரன்களும், கேப்டன் மிட்செல் சான்ட்னர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 34 ரன்களும் எடுத்தனர். மறுமுனையில் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதால் போட்டி கடைசி வரை பரபரப்பாக சென்றது.
இறுதியில் நியூசிலாந்து அணி 44.1 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றி உள்ளது. 5-வது ஒருநாள் போட்டி 22-ம் தேதி நடைபெற உள்ளது.