

ஐதராபாத்,
வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் அபாரமாக பந்து வீசிய கீமோ பால் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது ஆட்டத்தில் இந்தியாவும், 2-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றன. தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இவ்விரு அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் ஷாய் ஹோப் அதிரடியாக விளையாடினார். அவர் 50 பந்துகளில் 102 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 4 பவுண்டரிகளும் 9 சிக்சர்களும் அடங்கும்.
மற்றொரு வீரர் ரூதர்போர்டு 26 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும், ஷிம்ரன் ஹெட்மையர் 12 பந்துகளில் 33 ரன்களும், ரோவ்மன் பவல் 17 பந்துகளில் 24 ரன்களும் எடுத்தனர்.
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அக்சர் படேல், பிரின்ஸ் யாதவ், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இதையடுத்து 248 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி இந்திய அணியின் சார்பில் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் அதிரடியாக ரன்கள் குவித்த சஞ்சு சாம்சன் தனது அரை சதத்தை பதிவு செய்திருந்தநிலையில் 56 (23) ரன்களுக்கு கேட்ச் ஆகி வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் 6 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 16 ரன்களும், அபிஷேக் சர்மா 29 ரன்களும், நமன் திர் (0) ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.
அடுத்ததாக திலக் வர்மா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். அதிரடியாக ரன்கள் குவித்து வந்த இந்த ஜோடியில் திலக் வர்மா 43 (25) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து நிதிஷ் குமார் ரெட்டி 41 (20) ரன்களும், அடுத்து களமிறங்கிய பிரின்ஸ் யாதவ் (0) ரன் ஏதும் எடுக்காமலும், அக்சர் பட்டேல் 3 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். முடிவில் அர்ஷ்தீப் சிங்கிற்கு காயம் ஏற்பட ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இறுதியில் இந்திய அணி 19.3 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் மட்டுமே எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் அபாரமாக பந்து வீசிய கீமோ பால் 5 விக்கெட்டுகளும், மோட்டி 2 விக்கெட்டுகளும், ஷெப்பர்ட் மற்றும் ஸ்பிரிங்கர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
இதன்படி டி20 கிரிகெட் தொடரில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.