

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டி20, 5 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் 3 டி20 போட்டிகள் நடைபெற்ற நிலையில் 3 போட்டிகளிலும் இந்தியா வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் டி20 தொடரை 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
இந்நிலையில், நியூசிலாந்து, இந்தியா இடையேயான 4வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. ஆக்லாந்தில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 259 ரன்கள் எடுத்தது. அந்த அணியில், கிளென் பிலிப்ஸ் 107 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 260 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.
தொடக்க வீரர்களான சஞ்சு சாம்சன் 4 ரன்களிலும், இஷான் கிஷன் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த அபிஷேக் சர்மா 27 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
தொடர்ந்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 22 ரன்களிலும், அக்சர் படேல் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். நிதிஷ் குமார் ரெட்டி 21 ரன்களும், நமன் தீர் 28 ரன்களும் எடுத்து வெளியேறினர். மறுமுனையில் போராடிய திலக் வர்மா 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அர்ஷ்தீப் சிங் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டப்பி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதன் மூலம் நியூசிலாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.