ஆப்கானிஸ்தான் தொடர் - இந்தியாவுக்கு இரட்டை அதிர்ச்சி... கோலியை தொடர்ந்து ஹர்திக்கும் விலகல்

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி களமிறங்க உள்ளது.
ஆப்கானிஸ்தான் தொடர் - இந்தியாவுக்கு இரட்டை அதிர்ச்சி... கோலியை தொடர்ந்து ஹர்திக்கும் விலகல்
Published on

சென்னை,

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு முன்பாக இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நட்சத்திர ஆல்-ரவுண்டரான ஹர்திக், தசைப்பிடிப்பு (Muscle Strain) காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து விலகியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே விலகிய விராட் கோலி

முன்னதாக, விராட் கோலி, ஐபிஎல் தொடரின் போது ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக இந்த தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக ஜெய்ஸ்வால் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். தற்போது ஹர்திக் பாண்ட்யாவும் விலகியிருப்பது இந்திய அணிக்கு இரட்டை அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்த தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி களமிறங்க உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி வருகிற 13-ம் தேதி தர்மசாலாவில் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, 2-வது ஒருநாள் போட்டி 17-ம் தேதியும் 3-வது ஒருநாள் போட்டி 20-ம் தேதியும் நடைபெற உள்ளது.

மாற்று வீரர் யார்?

ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக யார் அணியில் சேர்க்கப்படுவார் என்பது குறித்து பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. முக்கிய வீரர்களான விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்ட்யா இருவரும் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியிருப்பது, இந்திய அணிக்கு எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com