

நகோயா,
ஆசிய விளையாட்டில் தங்கப் பதக்கத்துக்கான இறுதி ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில் (20 ஓவர்) நிஷின் நகரில் உள்ள கரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) அரங்கேறும் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தானுடன் மோதுகிறது.
நேரடியாக காலிறுதியில் கால்பதித்த இந்திய அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டதால், தரவரிசை அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் இலங்கையை 45 ரன்களில் சுருட்டி மிரள வைத்தது. அதில் முதலில் பேட் செய்த இந்திய அணியில் இஷான் கிஷன் 80 ரன்கள் விளாசி அசத்தினார்.
சூர்யவன்ஷி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் என இந்தியாவின் பேட்டிங் மிக வலுவாக காணப்படுகிறது. பந்து வீச்சில் பும்ரா, அக்ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் கைகொடுக்கிறார்கள். இங்குள்ள ஆடுகளத்தில் பந்து நன்கு சுழன்று திரும்புவதுடன் தாறுமாறாக எகிறுவதால் சுழற்பந்து வீச்சின் தாக்கம் முக்கிய பங்கு வகிக்கும்.
சஹிப்சதா பர்ஹான் தலைமையிலான பாகிஸ்தான் அணி அரையிறுதியில் வங்காளதேசத்தை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இது பாகிஸ்தானின் 2-ம் தர அணி என்றாலும் அவ்வளவு எளிதில் குறைத்து மதிப்பிட முடியாது. சப்யான் மொகிம், அப்ரார் அகமது உள்பட 4 சுழற்பந்து வீச்சாளர்களுடன் தாக்குதல் தொடுக்க வியூகம் வகுத்துள்ளனர். நடப்பு ஆசிய விளையாட்டில் பாகிஸ்தான் தங்களது முதலாவது தங்கப் பதக்கத்துக்கு குறி வைத்திருக்கிறது. எது எப்படி என்றாலும் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
இவ்விரு அணிகளும் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 17 முறை நேருக்கு நேர் சந்தித்ததில் இந்தியா 14-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் கண்டுள்ளது. கடைசியாக பாகிஸ்தானுடன் மோதிய 6 ஆட்டங்களிலும் இந்தியாவே வெற்றி பெற்றிருக்கிறது. இதில் 2025-ம் ஆண்டு ஆசிய கோப்பை இறுதி ஆட்டமும் அடங்கும். வானிலையை பொறுத்தவரை மழை ஆபத்தில்லை என அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா: சூர்யவன்ஷி, அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), இஷான் கிஷன், திலக் வர்மா, ஷிவம் துபே, அக்ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா.
பாகிஸ்தான்: சஹிப்சதா பர்ஹான் (கேப்டன்). மாஸ் சஹதத், உஸ்மான், சைம் அயூப், ஹசன் நவாஸ், அப்துல் சமாத், அராபத் மின்ஹாஸ், அகமது டேனியல், முகமது வாசிம், சப்யான் மொகிம், அப்ரார் அகமது.
இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. முன்னதாக நடக்கும் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இலங்கை - வங்காளதேச அணிகள் (அதிகாலை 5.30 மணி) மோதுகின்றன.