

லீட்ஸ்,
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் தொடங்க உள்ள நிலையில், பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் முக்கிய வீரரான பாபர் அசாம், கையில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இங்கிலாந்தின் கவுண்டி கிளப் செலக்ட் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின்போது பாபர் அசாமுக்கு காயம் ஏற்பட்டது. வேகப்பந்து வீச்சாளர் மேனி லும்ஸ்டன் வீசிய பந்து, பாபரின் வலது கையில் பலமாக தாக்கியது. அப்போது 5 ரன்கள் எடுத்திருந்த பாபர், வலியால் தொடர்ந்து விளையாட முடியாமல் ‘ரிட்டயர்ட் ஹர்ட்’ முறையில் வெளியேறினார்.
இதன் காரணமாக, லீட்ஸில் நடைபெறும் முதல் டெஸ்டில் பாபர் அசாம் விளையாடமாட்டார் என கூறப்படுகிறது. இது பாகிஸ்தானுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
பாபர் அசாம் இல்லாத நிலையில், பாகிஸ்தான் அணியை வழிநடத்த ஷான் மசூத் அல்லது சல்மான் ஆகா ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
லீட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் இதுவரை 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 6 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.
மறுபுறம், சொந்த மண்ணில் லீட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து வலுவாக உள்ளது. அந்த அணி இந்த மைதானத்தில் விளையாடிய கடைசி 6 டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது.