டி.என்.பி.எல். வரலாற்றில் 2-வது அணியாக மாபெரும் சாதனை படைத்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

நடப்பு டி.என்.பி.எல். தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அனைத்து லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது.
image courtesy: twitter/@TNPremierLeague
image courtesy: twitter/@TNPremierLeague
Published on

திண்டுக்கல்,

9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் முதல் மூன்று கட்ட லீக் ஆட்டங்கள் கோவை, சேலம், நெல்லையில் நடந்தன. இதனையடுத்து கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.எல். கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது.

இதில் நேற்று நடைபெற்ற 25-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. மழை காரணமாக சுமார் 1 மணி நேரம் தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 156 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆதீக் உர் ரஹ்மான் 41 ரன்கள் அடித்தார். சேப்பாக் அணியில் அதிகபட்சமாக விஜய் சங்கர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 9.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 71 ரன்கள் எடுத்திருந்தபோது திடீரென மைதானத்துக்குள் ஏமாளமான பூச்சிகள் படையெடுத்தன. இதனால் சுமார் 20 நிமிடம் ஆட்டம் தடைபட்டது. அதன் பிறகு ஆட்டம் தொடங்கும்போது, டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி சேப்பாக் அணிக்கு 14 ஓவர்களில் 114 ரன்கள் வெற்றி இலக்காக மாற்றியமைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து களமிறங்கிய 12.5 ஓவர்களில் சேப்பாக் அணி 4 விக்கெட்டுக்கு 114 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் அதிகபட்சமாக விஜய் சங்கர் 28 ரன்கள் அடித்தார். மதுரை அணி தரப்பில் ஆயுஷ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இதனையும் சேர்த்து 7-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் ஆடிய சேப்பாக் அணி அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்துள்ளது.

இதன் மூலம் டி.என்.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சீசனில் லீக் ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்ற 2-வது அணி என்ற மாபெரும் சாதனையை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் படைத்துள்ளது. இதற்கு முன்பு 2017-ம் ஆண்டு தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி இந்த சாதனையை படைத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com