

சென்னை,
ஐபிஎல் 2026 சீசன் தொடங்க உள்ள நிலையில், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் பேட்டிங் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக் கூறிய கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளன. ஆர்சிபி அணியின் சிறந்த வீரர்களைக் கொண்டு ‘ஆல் டைம் ஆர்சிபி பிளேயிங் 11’ அணியை அவர் தேர்வு செய்துள்ளார். அந்த அணியில் அவர் எடுத்த சில முடிவுகள் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளன. குறிப்பாக விராட் கோலி போன்ற நட்சத்திரம் இருக்கும்போது ரஜத் பட்டிதாருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கியிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரஜத் பட்டிதாரை கேப்டனாக தேர்வு செய்ததற்கு தினேஷ் கார்த்திக் காரணத்தையும் கூறினார். 2025 ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தது. அந்த வெற்றியில் ரஜத் பட்டிதார் கேப்டனாக முக்கிய பங்கு வகித்தார் என அவர் பாராட்டினார்.
தொடக்க வீரர்களாக கிறிஸ் கெய்ல் மற்றும் பாப் டு பிளெசிஸ் ஆகியோரை அவர் தேர்வு செய்துள்ளார். மூன்றாவது இடத்தில் விராட் கோலி, நான்காவது இடத்தில் கேப்டன் ரஜத் பட்டிதார், ஐந்தாவது இடத்தில் ஏபி டி வில்லியர்ஸ் இடம் பெற்றுள்ளனர். விக்கெட் கீப்பராக ஜிதேஷ் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆல்-ரவுண்டர் இடத்தில் க்ருனால் பாண்ட்யா இடம்பெற்றுள்ளார். பந்துவீச்சு பிரிவில் யுஸ்வேந்திர சாஹல், ஹர்ஷல் பட்டேல் , முகமது சிராஜ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தினேஷ் கார்த்திக் தேர்வு செய்த ஆல்-டைம் ஆர்சிபி 11:
கிறிஸ் கெயில், பாப் டு பிளெசிஸ், விராட் கோலி, ரஜத் பட்டிதார் (கேப்டன்), ஏபி டி வில்லியர்ஸ், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), க்ருனால் பாண்ட்யா, ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், ஜோஷ் ஹேசில்வுட்.