

லண்டன்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதில் முதல் 2 டெஸ்ட்டிலும் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்ததால் இமாம்-உல்-ஹக் உள்பட 7 முன்னணி வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டு நாடு திரும்ப பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது. மேலும் பயிற்சியாளர்களும் அதிரடியாக மாற்றப்பட்டனர்.
பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் இமாம்-உல்-ஹக், இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் மைதான போட்டியில் ஏற்பட்ட காயம் தொடர்பாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 2வது போட்டியில் ஏற்பட்ட காயம் தொடர்பாக, அவர் உண்மையிலேயே காயமடைந்தாரா அல்லது காயத்தை காரணம் காட்டி பேட்டிங் செய்யாமல் இருந்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது
இமாம்-உல்-ஹக் இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் மைதான டெஸ்ட் போட்டியில் இடது காலில் காயம் ஏற்பட்டதாகக் கூறி, அந்தப் போட்டியின் இரு இன்னிங்சிலும் விளையாடவில்லை..ஆனால் போட்டியின் நான்காவது நாளில் அவர் பயிற்சி செய்த வீடியோ வெளியானதால், அவரது காயம் குறித்து சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. காயம் உண்மையானதா, அவர் அணியிடம் சரியான தகவலைத் தெரிவித்தாரா, விதிமுறைகளை மீறினாரா என்பவை விசாரிக்கப்பட உள்ளன. தவறு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை விளையாடத் தடை விதிக்கப்படலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால் இப்போதைக்கு இமாமுக்கு இரண்டு ஆண்டு தடை விதிக்கப்படவில்லை. இது தொடர்பான விசாரணை மட்டுமே நடைபெற உள்ளது.