

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக நியூசிலாந்து அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் அதிரடி தொடக்க வீரரான டெவான் கான்வே, பயிற்சியின்போது சக வீரர் மேட் ஹென்றியுடன் எதிர்பாராதவிதமாக மோதியதில் தலையில் காயமடைந்துள்ளார். இதையடுத்து இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இருந்து அவர் விலகியுள்ளார். ஏற்கனவே முக்கிய வீரர்களான மார்க் சாப்மேன் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், தற்போது கான்வேயும் விலகியிருப்பது நியூசிலாந்து அணியின் பேட்டிங் வரிசைக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது.
இந்தச் சம்பவம் ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்ற பயிற்சியின்போது நிகழ்ந்துள்ளது. அப்போது நியூசிலாந்து வீரர்கள் கேட்ச் பிடிக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். பந்தைப் பிடிப்பதற்காக முயற்சி செய்தபோது டெவான் கான்வேயும் வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றியும் எதிர்பாராதவிதமாக ஒருவருடன் ஒருவர் மோதிக்கொண்டனர். இந்த மோதலில் இருவருக்கும் தலையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால், உடனடியாக மைதானத்தில் இருந்த மருத்துவக் குழுவினர் இருவருக்கும் முதலுதவி அளித்தனர். தொடர்ந்து இருவருக்கும் தலையில் ஏற்பட்ட காயம் தொடர்பான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் டெவான் கான்வேயின் நிலை குறித்து மருத்துவர்கள் கூடுதல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியிருந்ததால், அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதன் காரணமாக அவர் இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்த மோதலில் காயமடைந்த மற்றொரு வீரரான மேட் ஹென்றியின் உடல்நிலையும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவருக்கும் தலையில் காயம் ஏற்பட்டதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் முதல் ஒருநாள் போட்டிக்கான அணித் தேர்வில் அவர் பரிசீலனையில் இருப்பதாக நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டெவான் கான்வே விலகியுள்ளதால், அவருக்குப் பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான டிம் செய்ஃபர்ட் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.