இவ்வளவு தூரம் முன்னேறி, வெற்றி வாய்ப்பை உருவாக்கியிருப்பது மகிழ்ச்சி: வெஸ்ட் இண்டீஸ் கேப்டன்

எங்களது வீரர்கள் காட்டி வரும் முன்னேற்றம் பாராட்டுக்குரியது.

இவ்வளவு தூரம் முன்னேறி, வெற்றி வாய்ப்பை உருவாக்கியிருப்பது மகிழ்ச்சி: வெஸ்ட் இண்டீஸ் கேப்டன்
Published on: 

பெங்களூரு,

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2–2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. பெங்களூருவில் நடைபெற்ற கடைசிப் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இது தொடர்பாக பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப் கூறியதாவது,

நாங்கள் இலக்கை நெருங்கிவிட்டோம். கடந்த பல ஆண்டுகளாக எங்களால் எட்ட முடியாத ஒரு நிலையை இப்போது அடைந்திருக்கிறோம். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கலாம்; சரியான ஆண்டுகள் எனக்கு நினைவில் இல்லை. இருப்பினும், இந்தத் தொடரில் இவ்வளவு தூரம் முன்னேறி, வெற்றி பெறுவதற்கான நல்ல வாய்ப்பை உருவாக்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

ஒரு அணியாக நாங்கள் எப்படிச் செயல்பட்டு வருகிறோம் என்பதையும், எங்களது ஆட்டம் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருவதையும் இது காட்டுகிறது. வெற்றி என்பது தொடரைக் கைப்பற்றுவதில் மட்டுமே இல்லை. ஒரு அணியாக வீரர்கள் எந்த அளவுக்கு முன்னேறுகிறார்கள் என்பதைப் பார்ப்பதும் முக்கியம். அந்த வகையில், எங்களது வீரர்கள் காட்டி வரும் முன்னேற்றம் பாராட்டுக்குரியது.

டி20 தொடரில் எங்களுக்குக் கிடைத்த நேர்மறையான அம்சங்கள் பல உள்ளன. குறிப்பாக, பந்துவீச்சில் வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். நெருக்கடியான சூழ்நிலைகளில் தங்களது திறமையைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.என்று அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com