இலக்கை வெற்றிகரமாக விரட்டிப்பிடிப்பது எப்படி? - விராட் கோலி பதில்

இலக்கை வெற்றிகரமாக விரட்டிப்பிடிப்பது எப்படி என்பது குறித்து விராட் கோலி பதில் அளித்துள்ளார்.
இலக்கை வெற்றிகரமாக விரட்டிப்பிடிப்பது எப்படி? - விராட் கோலி பதில்
Published on

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி, வங்காளதேச வீரர் தமிம் இக்பாலுடன் இன்ஸ்டாகிராமில் உரையாடுகையில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2013-ம் ஆண்டில் இருந்து இந்திய அணி வேகப்பந்து வீச்சை எதிர்கொள்வதில் நல்ல முன்னேற்றம் கண்டு இருக்கிறது என்றால் அதற்கு காரணம் உதவி பயிற்சியாளர் ராகவேந்திரா எனலாம். அவர் பயிற்சியின் போது சைடு ஆர்ம் உபகரணத்தை பயன்படுத்தி மணிக்கு 150-155 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் போது எங்களது கால் நகர்த்தல் மற்றும் பேட்டிங் அசைவு திறமையை வளர்க்க உதவுகிறது. அவருடன் பயிற்சியில் ஈடுபட்டு விட்டு போட்டிக்கு நுழையும் போது, பந்தை எதிர்கொள்ள நிறைய நேரம் கிடைப்பது போல் உணர முடிகிறது. போட்டி சூழ்நிலையில் எனது ஆட்டம் குறித்து நான் ஒருபோதும் சந்தேகப்படமாட்டேன். எப்பொழுதும் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டியது முக்கியமானதாகும். சிறுவனாக இருந்த போது, நான் பார்த்த போட்டிகளில் இலக்கை விரட்டும் போது இந்திய அணி தோல்வி அடைந்தால், நாம் இருந்து இருந்தால் போட்டியை வென்று கொடுத்து இருக்கலாம் என்று நினைத்தது உண்டு.

380 ரன்கள் இலக்கை சேசிங் செய்தாலும் என்னால் முடியாது என்று ஒருபோதும் நினைக்கமாட்டேன். மெகா இலக்கு என்றாலும் இயல்பான மனநிலையிலேயே விளையாடுவேன். 2011-ம் ஆண்டு ஹோபர்ட்டில் நடந்த இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 40 ஓவருக்குள் 320 ரன்கள் எடுத்தால் தான் இறுதிசுற்று வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்ற நிலைமை இருந்தது. அப்போது நான் இந்த போட்டியை இரண்டு 20 ஓவர் போட்டி என்று நினைத்து அணுகுமுறையை மேற்கொள்வோம் என்று சுரேஷ் ரெய்னாவிடம் சொன்னேன். அதுமாதிரி செயல்பட்டதால் தான் அந்த போட்டியில் வெற்றி பெற முடிந்தது. மற்ற வீரர்களை போல் நான் ஒரே மாதிரியாக பேட்டிங் செய்வதை விரும்புவது கிடையாது. சூழ்நிலைக்கு தகுந்தபடி எனது ஆட்ட அணுகுமுறையை அடிக்கடி மாற்ற முயற்சிப்பேன் என்று கோலி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com