

செஸ்டர் லீ ஸ்டிரிட்,
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சூர்யவன்ஷி களமிறங்குவாரா? என்ற கேள்விக்கு ஸ்ரேயாஸ் அய்யர் சஸ்பென்ஸுடன் பதிலளித்துள்ளார்.
அயர்லாந்து தொடரை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிராக 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று செஸ்டர்-லீ-ஸ்டிரீட்டில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இளம் வீரர் சூர்யவன்ஷியின் அறிமுகம் குறித்து அதிகளவில் கேள்விகள் எழுப்பப்பட்டன.
அதற்கு பதிலளித்த இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், "என்ன நடக்க போகிறது என்று யாருக்கும் தெரியாது. எங்கள் அணியின் திட்டம் குறித்து இப்போது எதையும் சொல்ல முடியாது.
அணியில் உள்ள அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். டி20 உலகக் கோப்பையை வென்ற வீரர்கள் அணியின் முக்கிய தூண்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்க வேண்டும். சூர்யவன்ஷி திறமையான வீரர். அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் போது, அதை சிறப்பாக பயன்படுத்தி நிச்சயம் தனது திறமையை நிரூபிப்பார் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.