

புதுடெல்லி,
இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் உதவி மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
44 வயதான யுவராஜ் சிங், இந்திய அணிக்காக 304 ஒருநாள் போட்டிகள், 40 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 58 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை மற்றும் 2011-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிகளில் முக்கிய பங்காற்றினார்.
சர்வதேச கிரிக்கெட்டில் நீண்ட அனுபவம் கொண்ட அவர், சுப்மன் கில், அபிஷேக் சர்மா, பிரப்சிம்ரன் சிங் உள்ளிட்ட இளம் இந்திய வீரர்களுக்கு வழிகாட்டியாகவும் செயல்பட்டுள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உதவி மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக நிய மிக்கப்பட்டுள்ள யுவராஜ்சிங் நேற்று அளித்த பேட்டியில்,
'டெல்லி அணியில் நீ எனது உதவியாளராக இருப்பாயா? என சவுரவ் கங்குலி என்னிடம் கேட்டார். அதற்கு நான். கடந்த 25 ஆண்டுகளாக நான் உங்கள் உதவியாளராகத் தான் இருந்து வருகிறேன். அனேகமாக அதே வேலையைத் தான் தொடர்ந்து செய்யப்போகிறேன். அதை செய்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி' என்று கூறினேன். இந்த வாய்ப்புக்காக கடந்த 3-4 ஆண்டுகளாக என்னை தயார்படுத்தி வந்துள்ளேன். தனிப்பட்ட முறையில் வீரர்களுடன் பணியாற்றி இருந்தாலும், ஒட்டுமொத்த அணிச் சூழலின் ஒரு பகுதியாக இருப்பது வித்தியாசமான அனுபவமாக இருக்கும். அதை நினைத்து மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்' என் றார்.